தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அணைக்காடு சிலம்பக்கூடம் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டும், வாக்குகளை யாருக்கும் விற்க கூடாது என்பதை வலியுறுத்தியும் உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வலுதூக்கும் பயிற்சியாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் உடற்கல்வி இயக்குனர் ரவிச்சந்தர் வரவேற்றார். நிகழ்ச்சியில் பங்கேற்ற பட்டுக்கோட்டை எஸ்.இ.டி. வித்யாதேவி பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் செங்கப்படுத்தான்காடு மாரிமுத்து-மாலா தம்பதியின் 9 வயது மகள் வர்ஷிகா 2 மணி நேரத்தில் 23 கிலோ மீட்டர் தூரம் ஓடி உலக சாதனை படைத்தார்.

 


முன்னதாக பட்டுக்கோட்டை பஸ் நிலையம் அருகே தொடர் ஓட்ட நிகழ்ச்சியை பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் பாலச்சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

சிறுமி வர்ஷிகா, பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து அதிராம்பட்டினம் சாலையில் 11 கிலோமீட்டர் தூரம் ஓடிச்சென்று மீண்டும் பட்டுக்கோட்டை அண்ணா அரங்கம் வரை 23 கிலோமீட்டர் தூரத்தை 2 மணி நேரத்தில் ஓடி சாதனை படைத்தார். இதற்கான சான்றிதழை நோபல் உலக சாதனை நடுவர் அர்ச்சுனன் முன்னிலையில் பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன் வர்ஷிகாவுக்கு வழங்கி உலக சாதனைக்கான பதக்கத்தை அணிவித்து பாராட்டினார்.

அதைத்தொடர்ந்து பட்டுக்கோட்டை அண்ணா அரங்கில் புனல்வாசல் டான் பாஸ்கோ மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு மாணவி சிவானி (வயது17), பட்டுக்கோட்டை இசபெல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 9-ம்வகுப்பு மாணவி ஹரிணி (14) ஆகிய இருவரும் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை தொடர்ந்து 8 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர்.

நிகழ்ச்சியில் குத்துச்சண்டை கழக மாநில துணைத்தலைவர் ஜலேந்திரன், டாக்டர் சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டு மாணவிகளை பாராட்டினர். முடிவில் அணைக்காடு சிலம்பக்கூட பயிற்சியாளர் ஷீலா நன்றி கூறினார்.