பொதுவாகவே விநாயகர் சதுர்த்தியானது விநாயகரின் பிறந்தநாளாக இந்துக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது.
இந்த சிறப்பு மிக்க நாளில் விநாயகருக்கு விசேடமாக பிரசாதங்களை செய்து வீடுகளில் சிறப்பு பூஜை செய்து வழிப்பட்டால் சகல செல்வங்களுகம் ஐஸ்வர்யங்களும் நிறைவாக கிடைக்கும் என்று நம்பப்படுகின்றது.
இந்த வகையில் விநாயகர் சதுர்த்தியை மேலும் சிறப்பாக்க பிள்ளையார்பட்டி ஸ்பெஷல் பாரம்பரிய அரிசி பருப்பு மோதகத்தை செய்து உங்க வீட்டு பூஜைக்கு வருபவர்களுக்கு கொடுத்து அசத்த்துங்கள். இந்த மோதகத்தை எவ்வாறு எளிமையான முறையில் அசத்தல் சுவையில் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
தண்ணீர் - 3 கப்
உப்பு - 1 சிட்டிகை
வெல்லம் - 1 1/2 கப்
துருவிய தேங்காய் - 1 கப்
நெய் - 1 தே.கரண்டி
ஏலக்காய் தூள் - 1/2 தே.கரண்டி
செய்முறை
முதலில் பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை நன்றாக சுத்தம் செய்து, அரிசி, பருப்பு முழுமையாக மூழ்கும் அளவில் தண்ணீர் ஊற்றி குறைந்தது ஒரு மணிநேரம் வரையில் ஊறவிட வேண்டும்.
அவை நன்றாக ஊறியதன் பின்னர், ஒரு துணியை தரையில் விரித்து, அதில் அரிசி பருப்பை போட்டு பரப்பி, 20 நிமிடங்கள் வரையில் நன்றாக உலரவிட வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் அரிசி மற்றும் பருப்பை சேர்த்து நன்றாக வாசனை வரும் வரையில் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின் வறுத்த அரிசி பருப்பை ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து, சற்று கொரகொரப்பான பதத்தில் அரைத்துக் கொள்ள வேண்டும். (இந்த பொடியை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு சேமித்து வைத்து தேவையாக போது மோதகம் செய்யலாம்.)
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 3 கப் நீரை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் சூடானதும் அரைத்து வைத்துள்ள அரிசி பருப்பு பொடியை கொஞ்சம் கொஞ்சமாக அதில் போட்டு 5-7 நிமிடங்கள் வரையில் நன்றாக கிளறிவிட வேண்டும்.
மாவு நன்றாக வெந்ததும் அதனுடன் வெல்லத்தையும் சேர்த்து நன்றாக வெல்லம் கரையும் வரை கிளறி விட்டு, அதனுடன் துருவிய தேங்காய், நெய் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு அல்வா பதத்திற்கு திறண்டு வரும் வரையில் கிளறிவிட வேண்டும்.
பின்னர் கைகளால் தாங்கக்கூடிய சூட்டில் ஆறவிட்டு மோதகம் அச்சை எடுத்து, அதனுள் நெய் தடவி, மாவை வைத்து மோதகம் செய்து, ஒரு தட்டில் அழகாக அடுக்கிக்கொள்ள வேண்டும்.
கடைசியில் ஒரு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நீரை ஊற்றி, தண்ணீர் நன்றாக கொதித்ததும் ,இட்லி தட்டில் நெய் தடவி, செய்து வைத்துள்ள மோதகங்களை வைத்து 15நிமிடங்கள் வரையில் வேகவிட்டு இறக்கினால் அட்டகாசமாக சுசையில் பிள்ளையார்பட்டி அரிசி பருப்பு மோதகம் தயார்.