அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கோல்ப் விளையாட்டு வீரரான டைகர் உட்ஸ் கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ரசிர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டைகர் உட்ஸ் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தனது காரில் பயணம் செய்தபொழுது ரோலிங் ஹில் எஸ்டேட்ஸ் பகுதியில் திடீரென அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு வேலியை உடைத்துக்கொண்டு உருண்டு கவிழ்ந்து நொறுங்கியுள்ளது.

சம்பவம் குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் Alex Villanueva கூறியதாவது, கார் ஒன்று உருண்டு விபத்துக்குள்ளாகி கிடப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது, இந்த விபத்தில் வாகனம் பயங்கர சேதமடைந்து கிடந்தது.

நொறுங்கிய காருக்குள் சிக்கியிருந்து 15 முறை கோல்ப் சாம்பியன் பட்டம் வென்ற டைகர் உட்ஸை தீயணைப்பு மற்றும் மருத்துவகுழுவினர் மீட்டெடுத்தனர்.

வெளியே எடுத்த போது டைகர் உட்ஸ் உயிருடன், நினைவுடன் இருந்தார். பின்னர் அவர் ஆம்புலன்ஸ் மூலம் கலிபோர்னியாவின் வெஸ்ட் கார்சனில் உள்ள Harbor-UCLA மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார் என கூறினார்.

இந்த விபத்தில் டைகர் உட்ஸின் இரண்டு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருதவதாக உட்ஸின் ஏஜென்ட் மார்க் ஸ்டீன்பெர்க் உறுதிப்படுத்தினார்.

எனினும், உட்ஸின் காயம் குறித்தும், தற்போது அவரின் நிலைமை குறித்தும் எந்த தகவலும் வெளியாகவில்லை.

மருத்துவமனையில் உள்ள டைகர் உட்ஸ் விரைவில் குணமடைந்து நலம் பெற வேண்டும் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.