பிரித்தானியாவில் கடும் வயிற்றுவலியால் அவதியுற்ற குழந்தை ஒன்றை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள் பெற்றோர்.
22 மாதக் குழந்தையான Becca McCarthyயை பரிசோதித்த மருத்துவர்கள், முதலில் அவளுக்கு குடல் வால் அழற்சி இருக்கலாம் என்று எண்ணியிருக்கிறார்கள். ஆனால், எக்ஸ்ரே வித்தியாசமான ஒரு காட்சியைக் காட்டியது.
ஆம், Beccaவின் வயிற்றுக்குள் உருண்டையான பொருட்கள் சில சங்கிலிபோல் இணைந்திருந்ததைக் கண்ட மருத்துவர்கள், அவை உலோகத்தாலான பொருட்கள் என தெரியவந்ததையடுத்து அவளுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவுசெய்தனர். அதற்காக Beccaவின் குடல் தற்காலிகமாக அகற்றப்பட்டது.
அந்த குடலை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை காந்த உருண்டைகளை விழுங்கியிருப்பதைக் கண்டுபிடித்தனர்.
பல வண்ணங்களில் இருந்த அந்த காந்த உருண்டைகளை குழந்தை மிட்டாய் என்று எண்ணி விழுங்கியிருக்கிறாள்.
இரண்டரை மணி நேர அறுவை சிகிசைக்குப்பின் காந்த உருண்டைகளை அகற்றி குடலை இணைத்துள்ளனர் மருத்துவர்கள்.
மேலும் ஒரு வாரத்திற்கு Becca மருத்துவமனையில் செலவிடவேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளர்கள்.
இந்நிலையில், அந்த காந்த உருண்டைகளை தடை செய்யவேண்டும் என்று கோரியுள்ள Beccaவின் தாய், யாராவது அவற்றை வாங்கி வைத்திருந்தால் தயவு செய்து வீசியெறிந்துவிடுமாறு பெற்றோரைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டுள்ளார்.