சீனாவுடனான எல்லைப் பிரச்னை தொடர்பாக இந்தியப் பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசியதாகவும், இந்த விவகாரத்தில் அவர் அதிருப்தியில் இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியிருக்கிறார். இந்தியா மற்றும் சீனப் படைகள் லடாக் எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டு வருவது இருநாடுகள் இடையிலான பதற்றத்தை அதிகரித்திருக்கிறது. பேச்சுவார்த்தை மூலம் இருநாடுகள் இந்த விவகாரத்தில் தீர்வு காண வேண்டும் என சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரத்தில் இரு நாடுகள் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்
தெரிவித்திருந்தார். ஆனால், ட்ரம்பின் இந்தப் பேச்சை இந்தியா ரசிக்கவில்லை.
ட்ரம்ப்
இந்தநிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், சீன எல்லைப் பிரச்னை தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேசியதாகக் குறிப்பிட்டார். அவர் கூறுகையில், ``சீனாவுடனான எல்லைப் பிரச்னை தொடர்பாக பிரதமர் மோடி அதிருப்தியில் இருக்கிறார். இருநாடுகள் இடையே பெரிய பிரச்னையாக அது உருவெடுத்திருக்கிறது.
அமெரிக்க ஊடகங்கள் எனக்குத் தரும் மதிப்பை விட இந்தியாவில் எனக்கு அதிக மதிப்பு இருக்கிறது. பிரதமர் மோடியை எனக்குப் பிடிக்கும். உங்கள் பிரதமரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் நல்ல மனிதர். இந்தியா...சீனா இடையே பெரிய பிரச்னை இருக்கிறது. 140 கோடி மக்கள் கொண்ட இரண்டு நாடுகள். வலிமையான ராணுவத்தை அவை கொண்டுள்ளன. இந்த விவகாரத்தில் இந்தியாவும் சரி சீனாவும் சரி மகிழ்ச்சியாக இல்லை. பிரதமர் மோடியுடன் இதுதொடர்பாக நான் பேசினேன். சீனாவுடனான இந்தப் பிரச்னையால் அவர் அதிருப்தியில் இருக்கிறார்’’ என்று தெரிவித்தார்.
மோடி - ட்ரம்ப்
இருநாடுகள் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக ட்வீட் செய்திருந்தது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு ட்ரம்ப்,` `அது உதவிபுரியும் என்று அவர்கள் எண்ணினால், நிச்சயம் நான் அதைச் செய்வேன்’’ என்று பதிலளித்தார்.
இந்தநிலையில், சீனாவுடனா பிரச்னை தொடர்பாக ட்ரம்ப், பிரதமர் மோடியுடன் பேசியதாகக் கூறியதை இந்திய வெளியுறவுத் துறை மறுத்துள்ளது. இதுதொடர்பாக வெளியுறவுத் துறை, ``பிரதமர் மோடி - அதிபர் இடையே சமீபத்தில் எந்தத் தொலைபேசி உரையாடலும் நடைபெறவில்லை. இருவரும் கடைசியாகக் கடந்த ஏப்ரல் 4ம் தேதி பேசினர். அப்போது ஹைட்ராக்சிகுளோரோகுயின் உள்ளிட்ட விவகாரங்கள் மட்டுமே இருவரும் பேசியிருந்தனர்’’ என்று விளக்கமளித்துள்ளது. முன்னதாக, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக ட்ரம்ப் அறிவித்திருந்தார். ஆனால், ட்ரம்ப் தலையிடுவதை விரும்பவில்லை என அதை இந்தியா நிராகரித்திருந்தது.
மோடி - ட்ரம்ப்
லடாக் எல்லைப்பகுதியில் கடந்த 5ம் தேதி நேருக்கு நேர் இருநாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்களும் மோதிக்கொண்டனர். Pangong Tso பகுதியில் இருநாட்டு வீரர்களும் இரும்பு ராடுகள், கம்புகளைக் கொண்டு ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். இதில், இந்தியா மற்றும் சீன ராணுவத்தைச் சேர்ந்த 100 வீரர்கள் காயமடைந்தனர். அதேபோல், சிக்கிம் எல்லையில் இதேபோல் கடந்த 9ம் தேதி நடந்த மோதலில் இருநாடுகளின் 150 வீரர்கள் ஈடுபட்டனர். இதில், 10 பேர் கடுமையாகக் காயமடைந்தனர். இந்த விவகாரம் பதற்றத்தை அதிகப்படுத்திய நிலையில், இருநாடுகளைச் சேர்ந்த ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், நிலைமை சீரானது.