சொந்த வீடு வேண்டும் என விரும்புபவர்கள், இடம் வாங்கியும் வீடு கட்ட முடியவில்லையே என்று வருந்துவோர், திருமணம் தள்ளிப் போகிறதே என்று கலங்குவோர் செவ்வாய் பகவானுக்கு உரிய காயத்ரியை ஜபித்து வாருங்கள்.
சொந்த வீட்டு கனவை நிறைவேற்றி அருளுவார் செவ்வாய் பகவான். திருமண பாக்கியத்தைக் கொடுத்து அருளுவார். செவ்வாய் முதலான தோஷத்தை நிவர்த்தி செய்து அருளுவார் செவ்வாய் பகவான்.
நவக்கிரகங்களில் முக்கியமான தெய்வம் செவ்வாய் பகவான். வாழ்க்கையில் ஒருகட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்கு செவ்வாய் கிரகத்தின் அனுக்கிரகம் அவசியம் தேவை. சிறு வயதில், கல்வி இருந்தால்தான் அடுத்தகட்டத்துக்கு வளரமுடியும். அதனால்தான் புத்தியில் பலத்தைத் தருகிறார் செவ்வாய் பகவான். படித்துவிட்டு வேலைக்குச் செல்லும் போது, உடலில் பலம் வேண்டும். அந்த பலத்தையும் வழங்குகிறார் செவ்வாய் பகவான்.
அதுமட்டுமா? படிப்பு, வேலைக்குப் பின்னர் திருமணம் எனும் சந்ததி வளர்க்கும் விஷயம். சந்ததியை வளர்க்க, திருமணம் அவசியம். வாழ்க்கைத் துணை அவசியம். செவ்வாய் தோஷம் முதலான கிரக பலவீனம் இருந்தால், திருமணம் நடப்பது தடைப்படும். அதனால்தான் செவ்வாய் தோஷம் குறித்து விளக்குகிறது ஜோதிட சாஸ்திரம்.
படிப்பு, உத்தியோகம், திருமணம் என நல்லவிதமாக கைகூடி வரவேண்டும். அதன் பிறகு சொந்தவீடு என்பது எல்லோருக்குமான பெருங்கனவு. வாழ்வின் ஆகப்பெரிய பெரிய ஆசை. சொந்தவீடு என்பதன் மீது ஆசைப்படாதவர்களே இல்லை எனலாம்.
செவ்வாய் பகவான், பூமித்தாயின் மகன். பூமாதேவியின் மைந்தன். அதனால்தான் செவ்வாய் பகவானை பூமிகாரகன் என்கிறார்கள். செவ்வாய் பகவானையும் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானையும் வணங்கச் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.