நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு மாகாணங்களுக்கு  மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி – குருவிட்ட பிரதேசத்திற்கும், கேகாலை – தெஹியோவிட்ட பிரதேசத்திற்கும் நாளை மதியம் 12 மணி வரை இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவகம் தெரிவித்துள்ளது.

எனவே, மிகவும் அவதானத்துடன் தங்களது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு மக்களுக்கு  குறித்த நிறுவகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை மேலும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தொடர்ச்சியாக மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.