பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டமானது தற்போது முல்லைத்தீவு- நெடுங்கேணி நகரைச் சென்றடைந்துள்ளது.

இந்தப் பேரணி, திருகோணமலையில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் முல்லைத்தீவு மாவட்டத்தை வந்தடைந்தது.

போராட்டக்காரர்களை வழிமறித்த முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்றத் தடை உத்தரவினைக் காட்சிப்படுத்திய போதிலும் போராட்டக்காரர்கள் அவற்றைப் பொருட்படுத்தாது தொடர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அத்துடன், நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பிள்ளையார் கோயிலில் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

அத்துடன், உடுப்புக் குளம் பகுதியில் கூடியிருந்த முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பெருமளவான மக்களையும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து அங்கும் ஒரு கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு சிலாவத்தைச் சந்தியை அண்டிய பகுதிகளும் கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டதுடன் அங்கும் பெருமளவான மக்கள் போராட்டத்துடன் இணைந்து தமது ஆதரவினை வழங்கியருந்தனர்.

இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு நகரப் பகுதியில் கவனயீர்ப்புப் போராட்டம் மாவட்டச் செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டதுடன் அங்கிருந்து வாகனங்களில் வட்டுவாகல் பாலம் ஊடாக கோட்டாபய கடற்படைத்தளம் வரையில் பலத்த கோஷங்களுக்கு மத்தியில் பேரணி  சென்றது.

இதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்குச் சென்று அங்கு நினைவுச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து புதுக்குடியிருப்பு நகர் மற்றும் ஒட்டுசுட்டான் ஊடாகப் பயணித்த பேரணியானது தற்போது நெடுங்கேணி நகரை அடைந்துள்ளது.

இந்தப் போராட்டத்திற்கு சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள் எனப் பெரும் திரளான மக்கள் தமது ஆதரவினை வழங்கி இருக்கின்றார்கள்.

இதேவேளை, வடக்கு கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள், தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து இந்தப் பேரணியை முன்னெடுத்து வருகின்றன.

இந்நிலையில், பேரெழுச்சிப் பேரணியானது கிளிநொச்சி, வவுனியா சென்று மன்னார் ஊடாக நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பொலிகண்டியில் நிறைவடையவுள்ளது.