நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவல் முடிவுக்கு வரும் நிலையில் தற்போது டெங்கு காய்ச்சல் பரவல் தொடங்கி உள்ளது.


கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவர் ஒருவருக்கு டெங்கு அறிகுறி காணப்பட்டது. உடனடியாக அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்து பரிசோதித்தனர். அதில் அவருக்கு டெங்கு இல்லை என கண்டறியப்பட்ட பிறகு வீடு திரும்பினார்.

அதன்தொடர்ச்சியாக பாளை சமாதானபுரத்தில் உள்ள 24 வயது இளம்பெண்ணுக்கு டெங்கு உறுதிசெய்யப்பட்டது. அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதைப்போல் மாவட்டத்தில் சிலருக்கு டெங்கு அறிகுறிகள் காணப்பட்டது. அவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் பெண்கள் உள்பட 5 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து 5 பேரும் நெல்லை அரசு மருத்துவமனையில் உள்ள தனிவார்டில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி டீன் ரவிச்சந்திரன் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் டெங்கு அறிகுறியுடன் உள்ளவர்கள் இங்கு வந்து பரிசோதனை மேற்கொள்கிறார்கள். அதில் பெரும்பாலானவர்களுக்கு காய்ச்சல் இல்லை. தற்போது 5 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். மாநகர பகுதியில் யாருக்கும் இதுவரை டெங்கு அறிகுறிகள் கண்டறியப்படவில்லை.

தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சிறப்பு கவனத்துடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் கொரோனாவை போன்று டெங்குவையும் கட்டுப்படுத்த முடியும். பாதிப்பு கண்டறியப்படுபவர்களுக்கு 10 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு தொற்று இல்லை என்று தெரிந்த பின்னர் அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.