தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள செருவாவிடுதி தெற்கு செட்டியார் தெருவை சேர்ந்தவர் போத்தியப்பன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் அருள்செல்வி(வயது 24). பட்டதாரி பெண்.


இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராமையன் என்பவரின் மகன் முருகானந்தம்(35) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் தன்சிகா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மதுரையில் வசித்து வரும் தனது தோழி ஒருவரின் திருமணத்திற்கு சென்று வருவதாக வீட்டில் கூறி விட்டு அருள்செல்வி மதுரைக்கு புறப்பட்டு வந்தார். ஆனால் அதன்பிறகு அவர் வீட்டிற்கு திரும்பவில்லை. அவரைப்பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் தனது மனைவி அருள்செல்வி மாயமாகி விட்டதாக திருச்சிற்றம்பலம் போலீசில் முருகானந்தம் புகார் கொடுத்தார்.

இந்த புகார் குறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் செருவாவிடுதி பகுதியை சேர்ந்த ஒருவர் மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகில் உள்ள மருத்துவமனை அருகில் பழக்கடை நடத்தி வருவதாகவும், அவரும், அருள்செல்வியும் காதலித்து வந்ததும் தெரிய வந்தது.

இந்த நிலையில் அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதை அறிந்த அருள்செல்வி தன்னை தொட்டு தாலி கட்டிய கணவரையும், தான் பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தையையும் உதறி தள்ளி விட்டு தனது முன்னாள் காதலன் வீட்டில் அருள்செல்வி தஞ்சம் அடைந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற அருள் செல்வியின் உறவினர்கள் மற்றும் திருச்சிற்றம்பலம் போலீசார், மதுரை மாநகர மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் உதவியுடன் அருள்செல்வியை அழைத்து விசாரணை நடத்தினார்.

விசாரணையின்போது, எனக்கு கணவரும் வேண்டாம், குழந்தையும் வேண்டாம். நான் மதுரையில் உள்ள எனது தோழி வீட்டில் வாழ்ந்து கொள்கிறேன் என பிடிவாதமாக அருள்செல்வி கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

அருள்செல்வியின் உறவினர்கள் எவ்வளவோ கெஞ்சியும் அவர் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை எனவும் போலீசார் தெரிவித்தனர்.