மதுரை அருகே பரவை மேலரத வீதியை சேர்ந்தவர் ராக்கப்பன் மகன் வேல்முருகன் (வயது 33). இவருக்கும், திருமங்கலம் மேலஉரப்பனூரை சேர்ந்த வேலுச்சாமி மகள் கார்த்திகைசெல்விக்கும் (25) கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. வேல்முருகன் பரவையில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.


இவர்களுக்கு கவிதர்ஷனி (3) என்ற பெண் குழந்தையும், தங்கேஸ்வரன் (2) என்ற ஆண் குழந்தையும் இருந்தன. இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், கார்த்திகைசெல்வியின் உறவினர் திருமணம், நாளை நடக்க இருந்தது. இந்த திருமணத்திற்கு வேல்முருகனிடம் மொய் மற்றும் போக்குவரத்து செலவிற்கு கார்த்திகைசெல்வி பணம் கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதையடுத்து கோபத்தில் வேல்முருகன் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். இந்த பிரச்சினையால் மனவேதனையடைந்த கார்த்திகை செல்வி, திடீரென தனது 2 குழந்தைகளையும் ஒரு அறையில் வைத்து மண்எண்ணெயை அவர்கள் மீது ஊற்றி தீ வைத்தார். பின்னர் தன் மீதும் மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார்.

இதில் உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்ததில் வேதனை தாங்க முடியாமல் அலறினர். அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு வருவதற்கு 3 பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.