சித்தூர் மாவட்டம் புங்கனூர் மண்டலம் மங்கலம் பஞ்சாயத்து கங்காதரநெல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ரெட்டியப்பா. இவரின் மகன் சுரேஷ். இவர், 9 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஹேமபிந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

ஓராண்டாக ஹேமபிந்துவிடம் சுரேஷ் உனது தாய் வீட்டில் இருந்து கூடுதல் வரதட்சணையாக நகை, பணம் மற்றும் நிலத்தை எழுதி வாங்கி வருமாறு கூறி துன்புறுத்தி வந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாமியார் பார்வதியம்மா, மாமனார் ரெட்டியப்பா மற்றும் சுரேஷின் சகோதரர் நரேஷுடன் கணவரும் சேர்ந்து கொண்டு கூடுதல் வரதட்சணை கேட்டு எழுந்த தகராறின்போது ஹேமபிந்துவை தாக்கி உள்ளனர்.

 

இதுகுறித்து ஹேமபிந்து புங்கனூர் போலீசில் புகார் செய்தார். மேலும் கிராம முக்கியஸ்தர்கள் கணவன்-மனைவியை அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். ஆனால் தொடர்ந்து வரதட்சணை கேட்டு அவர்கள் ஹேமபிந்துவை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதனால் அவர் தனது கணவரை விட்டு பிரிந்து, புங்கனூர் கோனேட்டிப்பாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து, 2 குழந்தைகளுடன் தங்கி வசித்து வந்தார்.

சுரேஷ் தினமும் மதுபானத்தைக் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதேபோல் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த சுரேஷ் கத்தியால் ஹேமபிந்துவை சரமாரியாக வெட்டி, கழுத்தை அறுத்துப் படுகொலை செய்தார்.

ஹேமபிந்துவின் அலறல் சத்தத்தைக் கேட்டதும், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். வீட்டில் ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்த ஹேமபிந்துவை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள், புங்கனூர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் பிரசாத்பாபு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஹேமபிந்துவின் பிணத்தை மீட்டு புங்கனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக கணவர் சுரேஷ் கைது செய்யப்பட்டார்.