கதிர்காமத்திற்கு யாத்திரைக்கு சென்ற நபர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக அவர் கதிர்காமத்தில் தங்கியிருந்த விடுமுறை விடுதி, அதன் உரிமையார், அவரது மனைவி மற்றும் ஊழியர்கள் உட்பட் 9 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர் சமன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொலநறுவை, திவுலன்கடவல பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய இராணுவ கொப்ரல் ஒருவரே இவ்வாறு கதிர்காம யாத்திரைக்கு சென்றுள்ளார்.

அவர் கடந்த 7ஆம் திகதி 20 பேர் கொண்ட குழுவினருடன் கதிர்காமத்திற்கு யாத்திரைக்கு சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள விடுமுறை விடுதி ஒன்றில் தங்கியுள்ளார். கிரிவெஹர மற்றும் தேவலாயத்திற்கு சென்று 8ஆம் திகதி அங்கிருந்து சென்றுள்ளதாக சுகாதார அமைச்சினால் ஊவா மாகாண சபையின் சுகாதார பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர் அங்கு சில பகுதிகளுக்கு சென்று பலருடன் பழகியுள்ளார். அதற்கமைய அவர் கதிர்காமம் சென்றது முதல் அவர் பழகிய நபர்கள் தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

எதிர்வரும் நாட்களில் கதிர்காமத்தில் மேலும் சில கொரோனா நோயாளிகள் அடையாளம் காணக்கூடும் என்பதனால் அனைத்து மக்களும் அத்தியாவசிய விடயங்களை தவிர்த்து வெளியே செல்ல வேண்டாம் எனவும், மக்களுடன் பழகுவது மிகவும் அவதானமாக மேற்கொள்ள வேண்டும் எனவும், முக கவசம் அணிவது கட்டாயம் எனவும் சுகாதார ஆலோசனைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் பிரதேச மக்களுக்கு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.