அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தை சேர்ந்தவர் பிரைன். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அதே மாகாணத்தில் உள்ள விலங்குகள் காப்பகத்திலிருந்து ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒன்றைத் தத்தெடுத்து வளர்த்து வந்தார்.
சேடி என்று பெயரிடப்பட்ட அந்த நாயின் முதல் எஜமானர், வேறு மாகாணத்துக்கு இடம்பெயர்ந்தபோது, விலங்குகள் காப்பகத்தில் சேடியைச் சேர்த்தார். உரிமையாளரைப் பிரிந்து காப்பகத்தில் தனிமையில் தவித்து வந்த சேடியை பிரைன் தத்தெடுத்து வீட்டுக்கு அழைத்து சென்றார்.
தன்னை தனிமையிலிருந்து மீட்ட பிரைனிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தது சேடி. அதே போல் பிரைனும் சேடி மீது மிகுந்த பாசம் வைத்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் வீட்டில் யாருமில்லாதபோது பிரைனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. சத்தம் கேட்டு, பிரைனின் அறைக்கு சென்ற சேடி, தனது எஜமானர் கீழே விழுந்து கிடப்பதைப் பார்த்து அவருக்கு உடல்நலம் சரியில்லை என்பதை உணர்ந்தது. பின்னர் பிரைன் மயங்காமல் இருக்க அவர் முகத்தை நாக்கால் நக்கியது. மேலும், நகர முடியாமல் தவித்த பிரைனின் சட்டையைக் கவ்விக்கொண்டு செல்போன் இருக்கும் இடத்திற்கு இழுத்துச் சென்றது.
இதனால் அவரால் அவசர எண்ணிற்கு தொடர்புகொண்டு உதவி கேட்க முடிந்தது. அதன்படி ஆம்புலன்சில் வந்த மருத்துவ ஊழியர்கள் பிரனை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தற்போது பிரைன் நலமாக உள்ளார்.
இதற்கிடையில் உள்ளூரை சேர்ந்த விலங்குகள் மீட்பு குழு ஒன்று தனது பேஸ்புக் பக்கத்தில் சேடியின் புகைப்படத்துடன் அது தனது எஜமானரை காப்பாற்றியது பற்றி பதிவிட்டது. அடுத்த சில மணி நேரத்தில் இந்த பதிவு மிகவும் வைரலானது. பலரும் சேடியை பாராட்டி கருத்துகளை பதிவிட்டனர்.