இலங்கை பௌத்த சிங்கள நாடு என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் விடுதலைப்புலிகளால் நல்ல நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு வேறுபாதையில் செல்லுகின்றது என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் கட்சியின் இணைப்பாளருமான தர்மலிங்கம் சுரேஷ் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலைக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் தர்மலிங்கம் சுரேஷின் இல்லத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நியமிக்கப்பட்டுள்ள செயலணி தன்னுடைய வேலையை ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதியிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த செயலணி நியமிக்கப்பட்டதன் பின்னர் சிங்கள பேரினவாத சக்திகள் பல்வேறு விதமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் ஞானசார தேரர் இனவாத கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்.
200 வருடங்களின் பின்னரே இங்கு பௌத்தமதம் பற்றிய யெற்பாடுகள் இருந்ததே தவிர விஜயனின் வருகைக்கு முன்னரே இலங்கை தீவிலே சிங்களவர்கள் பூர்வீக குடிகள் என்றதற்கான ஆதாரங்களை ஞானசார தேரர் நிரூபிக்க வேண்டும் என சவால் விடுகின்றேன்.
இலங்கையில் தமிழர்கள் ஆதிக்குடிகள் என்பதற்கான ஆதாரம் இந்த சிங்கள அரசால் 1956ஆம் ஆண்டு விஜயனின் வருகை என்ற தலைப்புடன் ஒரு தபால் முத்திரை வெளியிடப்பட்டுள்ளது. இந்த முத்திரை விஜயனின் வருகையின்போது குவேனி இலங்கைத் தீவில் இருந்ததாகவும் இலங்கையில் தமிழர்கள் ஆதிக்குடிகள் என்பதை வெளிப்படையாக சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவிதமாக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அறிந்த பேரினவாதிகள் இதனை உடனடியாக இரத்து செய்துள்ளனர்.
வடக்கு கிழக்கு தமிழ் மக்களுடைய பூர்வீகதேசம் மரபுவழி தாயகம், நாங்கள் மொழி கலை கலாசார பண்பாடு கொண்டவர்கள். சிங்களவர்கள் எமது நிலப்பரப்பை அபகரித்து ஒட்டுமொத்த பௌத்த நாடாக்க திட்டமிடுகின்றது. இதற்காக தமிழ் மக்களிடையே சோரம்போகின்ற அரச கட்சிகளுடன் சேர்ந்து செயற்படுகின்ற சில தலைவர்களைப் பயன்படுத்தி எங்களுடைய மக்களுடைய வாக்குகளை பெற்று இவ்வாறான திட்டங்களைத் தீட்டிவருகின்றனர்.
வடக்கு கிழக்கு தமிழர்களின் மரபுவழி தாயகம் இந்த தேசம் தாயக தேசமாக அங்கீகரிக்கப்பட்டால் மாத்திரமே இந்த நில அபகரிப்பை தடுக்கமுடியும். 70 வருடமாக இனவழிப்பு நடந்து வருகின்றது. இந்த நாடு ஒற்றையாட்சி எனவும் பௌத்த சிங்கள நாடு என சம்மந்தன் ஜயா பல சந்தர்ப்பத்தில் ஏற்றுக்கொண்டிருக்கின்றார். இது மட்டுமல்ல தேர்தல்கள் வரும்போது தீர்வு தொடர்பாக தெரிவிப்பார்.
தமிழர்களுக்கான மாற்றுத் தலைமை 2010இல் கஜேந்திரகுமார் தலைமையில் உருவாக்கப்பட்டுவிட்டது. எனவே சம்மந்தன் ஜயா தமிழ் தேசியக் கூட்டமைப்பை கலைத்துவிட்டு வீட்டுக்கு செல்லவேண்டிய ஒருவர்” என மேலும் தெரிவித்தார்.