வௌிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்களில் இதுவரை 21 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
மார்ச் மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் இவர்கள் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
ஏழு நாடுகளில் பணியாற்றிய இலங்கை பணியாளர்களே கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் மங்கள ரந்தெனிய குறிப்பிட்டார்.
அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களூடாக இவர்களின் உயிரிழப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வௌிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களில் சுமார் 1700 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
வௌிநாடுகளில் கொரோனா தொற்று அதிகரிப்பதால், நாடு திரும்புவதற்கு ஆயிரக்கணக்கான பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
44 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு நேரடியாக விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளானவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கான இலங்கை தூதரகங்களூடாக தேவையான வசதிகள் மற்றும் நிதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் மங்கள ரந்தெனிய சுட்டிக்காட்டினார்.