ஈரோட்டில் ஆன்லைன் வகுப்பு புரியாததால் தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

ஈரோடு நாராயணவலசு அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி (வயது 45). கூலித்தொழிலாளி.

இவருடைய மனைவி கன்னியம்மாள். இவர்களுக்கு மூன்று மகன்கள். இதில் இளைய மகன் அசோக் (19) ஈரோடு அருகே உள்ள ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு ஆன்லைன் வகுப்பு புரியவில்லை என்றும் இதனால் மன உளைச்சல் ஆக இருப்பதாகவும் தன்னுடைய தாயிடம் கூறி புலம்பியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் மின்விசிறியில் சேலையால் அசோக் தூக்குபோட்டு கொண்டார். இதப்பார்த்த பெற்றோர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அசோக் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அசோக்கின் உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.