கோயில்களில் குட முழுக்கு விழா நடத்த தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளது. இதன்படி குறித்த விழா எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் நடைபெறுகிறது. இதில் 100 பேருக்கு மேல் கலந்துகொள்ள கூடாது எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்  “தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழிபாடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பல்வேறு வழிபாட்டு தலங்களில் பணிகள் முடிந்தும் பல மாதங்கள் குடமுழுக்கு செய்ய முடியாமல் தடைபட்டுள்ளது. குடமுழுக்கு செய்ய அனுமதிக்க வேண்டும் என பல கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.

இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் வரும் 16ம் திகதி முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 100 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ளும் வகையில் குடமுழுக்கு விழா நடத்த அனுமதிக்கப்படுகின்றது.

கொரோனா தொற்று ஏற்படா வண்ணம், முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைபிடித்து இவ்விழாக்களை நடத்த வேண்டாம். பொது மக்களின் நலன் கருதி அரசு எடுத்து வரும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொது மக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை நல்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.