கேரளாவில் திருவனந்தபுரம் அருகே பிரசித்திப்பெற்ற சுற்றுலா தலமான விதுரா வனப்பகுதி உள்ளது. இங்குள்ள கல்லாறு ஆற்றுப்பகுதியில் சுமார் 25 வயதுடைய தாய் யானை ஒன்று இறந்து கிடந்தது. அதன் அருகில் குட்டி யானை ஒன்று தாயை பிரிய முடியால் பாசப்போராட்டம் நடத்தியது. தாய் யானை இறந்தது தெரியாமல், அதன் உடலை தன்னுடைய தும்பிக்கையால் தட்டி, தட்டி எழுப்பியது.

குட்டி யானையின் பாசப்போராட்டத்தை சிலர் நேரில் பார்த்து, உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் வனத்துறை ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று இறந்த தாய் யானையின் உடலை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால், குட்டியானை வன ஊழியர்களை அருகில் செல்ல அனுமதிக்கவில்லை.

தொடர்ந்து வனத்துறை ஊழியர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி குட்டி யானையை மீட்டனர். அதற்கு சுமார் 1 வயது இருக்கும். வனச்சட்டப்படி ஒரு வயது நிறைவடையாத குட்டி யானையை காட்டுக்குள் விட முடியாது. எனவே, இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் ெகாடுத்தனர்.

அதிகாரிகளின் அனுமதிப்படி குட்டியானை கோட்டூர் யானைகள் பாதுகாப்பு முகாமில் ஒப்படைக்கப்பட்டது. அத்துடன் இறந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்து காட்டுக்குள் புதைத்தனர். தாய் யானை இறந்தது தெரியாமல், அதன் உடலை தும்பிக்கையால் தட்டி, தட்டி எழுப்பிய குட்டி யானையின் பாசப்போராட்டம் நெகிழ்ச்சி அடைய செய்தது.