தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் சென்னையில் புத்தக கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக சற்று தாமதமாக புத்தக கண்காட்சி தொடங்கி நடைபெற இருக்கிறது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 44-வது புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
இதற்கான தொடக்க விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். மாலை 6 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் சிறப்பு விருந்தினராக பங்குபெற்று பல ஆண்டுகளாக பதிப்புத்துறையில் சிறப்பாகச் செயல்பட்டு வருபவர்களை கவுரவிக்க உள்ளார்.
ஒவ்வொரு நாளும் புத்தக கண்காட்சி காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 8 மணிக்கு நிறைவு பெறும். இந்த கண்காட்சி அடுத்த மாதம் (மார்ச்) 9-ந்தேதியுடன் முடிவடைகிறது. கண்காட்சிக்கு அனுமதி கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படும். கண்காட்சியில் சுமார் 700 அரங்குகளுடன் 500 பதிப்பாளர்களின் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளிலான புத்தகங்கள் இடம்பெற இருக்கின்றன.
கொரோனா நோய்த்தொற்றுக்கு மத்தியில் புத்தக கண்காட்சி நடத்தப்படுவதால், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக, அரங்குகளுக்கான பாதைகள் வாசகர்கள் நெரிசலின்றி செல்வதற்கு ஏதுவாக விசாலமாக அமைக்கப்பட்டுள்ளன.
வரும் 28-ம் தேதியன்று உலக அறிவியல் தினத்தையொட்டியும், மார்ச் 8-ம் தேதியன்று மகளிர் தினத்தையொட்டியும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. கண்காட்சி தொடங்குவதில் இருந்து ஒவ்வொரு நாளும் வெளிஅரங்கில் புத்தக வெளியீடுகள், சிறந்த புத்தகங்களின் அறிமுகம், விமர்சனம் ஆகியவை நடைபெறும்.
கண்காட்சியில் வழக்கமாக வழங்கப்படும் 10 சதவீத தள்ளுபடி கிடைக்கும். இதுதவிர சில பதிப்பாளர்கள் 20 முதல் 30 சதவீதம் வரையில் தள்ளுபடி வழங்குவார்கள். இந்த ஆண்டு புத்தக கண்காட்சிக்கு 10 லட்சம் வாசகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். கடந்த ஆண்டு ரூ.20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை ஆனது. இந்த ஆண்டும் அந்த இலக்கை எட்டுவோம் என்று நம்புகிறோம் என பபாசி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.