அமீரகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் சுகாதார அமைச்சகம் சார்பில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஒரே நாளில் 93 ஆயிரத்து 4 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 23 லட்சத்து 39 ஆயிரத்து 73 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அபுதாபி சுகாதாரத்துறை சார்பில் செயல்படும் அல் குவா சுகாதார மையத்திற்கு நேற்று அமீரகத்தை சேர்ந்த சபா சலெம் ஹம்தான் அல் திரி என்ற 100 வயதான மூதாட்டி தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்தார். இவர் அல் அய்ன் பகுதியில் வசித்து வருகிறார். அவருக்கு அந்த சுகாதார மையத்தின் ஊழியர் சினோபார்ம் கொரோனா தடுப்பூசி மருந்தை உடலில் செலுத்தினார். தடுப்பூசி போட்டுக்கொண்ட அந்த மூதாட்டி கூறுகையில், ‘‘இது மிகவும் எளிதாக இருந்தது. எனக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. அமீரகத்தின் தலைவர்களுக்கு நன்றி செலுத்த எனக்கு இது ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது. அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்க அரசு வழிவகை செய்துள்ளது பாராட்டத்தக்கது’’ என்றார்.
இதுவரை அமீரகத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் அதிக வயதுடையவராக இந்த மூதாட்டியின் பெயரே இடம் பெற்றுள்ளது.