கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோலார் மாவட்டத்தின் நரசபுரா பகுதியில் தைவான் நாட்டை சேர்ந்த விஸ்ட்ரான் நிறுவனத்தின் தொழிற்சாலை அமைந்துள்ளது. 

இந்த தொழிற்சாலை ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஐபோன் மட்டுமல்லாமல் வேறுசில முன்னனி தொழில்நுட்ப நிறுவனங்களில் உபகரணங்களும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இதற்கிடையில், விஸ்ட்ரான் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்காமல் வேலைவாங்கியுள்ளது. 3 மாத சம்பளம் வழங்காமல் நிறுவனம் வேலை வாங்குவதாக சில ஊழியர்கள் குற்றம்சாட்டு நிலையில் சிலருக்கு 6 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன.

மேலும், சம்பளத்தை உரிய காலத்திற்குள் வழங்காமல் நிறுவனம் காலம்தாழ்த்துவதாகவும் ஊழியர்கள் குற்றம்சுமத்தியிருந்தனர். சம்பளப்பிரச்சனை மட்டுமல்லாமல் ஊழியர்கள் வலுக்கட்டாயமாக ஒப்பந்த நேரமான 8 மணி நேரத்தை விட கூடுதலாக 4 மணிநேரம் சேர்த்து மொத்தம் 12 மணிநேரம் வேலைபார்க்க நிறுவனத்தால் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். 

வேலைக்கு சேரும்போது  ஊழியர்களுக்கு 16 ஆயிரம் ரூபாய் சம்பளத்தொகை தருவதாக கூறிவிட்டு 12 ஆயிரம் ரூபாய் மட்டுமே தற்போதுவரை சம்பளமாக கொடுப்பதாவும் சில ஊழியர்கள் அந்நிறுவனம் மீது குற்றம்சுமத்தியுள்ளனர். இந்த விவகாரங்கள் குறித்து விஸ்ட்ரான் நிறுவனத்திடம் தொழிற்சங்கங்கள் மூலம் நடந்த பலகட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தன.

இந்நிலையில், ஊதியப்பிரச்சனை, அதிக வேலைப்பழு உள்பட பல்வேறு பிரச்சனைகளால் விஸ்ட்ரான் நிறுவனம் மீது ஆத்திரத்தில் இருந்த அந்நிறுவன ஊழியர்கள் இன்று காலை திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். விஸ்ட்ரான் நிறுவனத்தினுள் இன்று அதிரடியாக நுழைந்த ஊழியர்கள் தங்கள் கண்ணில் பட்டவற்றையெல்லாம் அடித்து நொறுக்கினார்.

நிறுவனத்தின் உள்ளே இருந்த கணிணி, கதவுகள், டிவி உள்பட அனைத்தையும் ஊழியர்கள் அடித்து சேதப்படுத்தினர். நிறுவனத்தின் வாகனங்களுக்கும் தீவைத்து கொளுத்தப்பட்டன.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசாரும், தீயணைப்பு துறையினரும் நிறுவனத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும், இந்த வன்முறை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் வன்முறையில் ஈடுபட்டதாக விஸ்ட்ரான் நிறுவனத்தை சேர்ந்த 100-க்கும் அதிகமானோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலையில் ஊழியர்களே வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.