சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதை அவரது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்படி ஒரு முடிவை எப்படி எடுத்தார்? வேறு ஏதோ நடந்திருக்கிறது என்று ஒவ்வொருவரும் பேசிக் கொள்கிறார்கள்.

நடிகை சித்ரா கடந்த புதன்கிழமை நசரத்பேட்டையில் ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தற்கொலை அல்ல. கொலை என சித்ராவின் பெற்றோரும், நண்பர்களும் சந்தேகித்தனர். ஆனால் பிரேத பரி சோதனை அறிக்கையில் அவரது மரணம் தற்கொலை தான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சித்ராவுக்கும், தொழில் அதிபர் ஹேம்நாத்துக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு பதிவு திருமணம் செய்துள்ளனர். இவை அனைத்தும் பெற்றோர் சம்மதத்துடனேயே நடந்துள்ளது.

விரைவில் திருமண கோலம் காண இருந்த சித்ரா இப்படி ஒரு முடிவை திடீரென்று எடுத்திருக்கிறார் என்றால் நிச்சயம் மிகப்பெரிய மன அழுத்தத்துக்கும் அதில் இருந்து மீள முடியாத நிலைக்கும் சென்றிருக்கிறார் என்கிறார்கள் விசாரணை அதிகாரிகள்.

சித்ரா

சித்ராவின் மரணத்திற்கு அவரது தாயும், அவரது கணவரும் கொடுத்த துன்புறுத்தலே காரணம் என போலீசார் தெரிவித்து உள்ளனர். கணவர் ஹேம்நாத், சித்ராவின் படப்பிடிப்பு தளங்களுக்கு வந்து பிரச்சினை கொடுத்ததாகவும், அவர் தொடர்ந்து நடிக்கக்கூடாது என வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

திருமணமானவுடன் கணவர் கூறுவதைத்தான் கேட்க வேண்டும் என சித்ராவின் தாயும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மாறி மாறி இரு தரப்பில் இருந்தும் கொடுத்த டார்ச்சரின் காரணமாக சித்ரா நிம்மதி இல்லாமல் தவித்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்றும் ஷூட்டிங் முடிந்து நள்ளிரவில் காரில் கணவருடன் ஓட்டலுக்கு திரும்பி இருக்கிறார். அப்போதும் அவர்களுக்குள் இந்த பிரச்சினை எழுந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சித்ரா பயன்படுத்திய செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். இறப்பதற்கு முன்பு யார் யாரிடம் பேசி இருக்கிறார்? என்ன பேசி இருக்கிறார்? என்பதை அறிய போலீசார் முயற்சித்தனர். ஆனால் செல்போனில் இருந்த ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளது.

இது போலீசாருக்கு கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏதோ காரணம் இருந்ததால்தான் தடயங்களை அழித்து இருக்கலாம் என்று கருதுகிறார்கள். எனவே செல்போன் பதிவுகளை மீட்டெடுக்க தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் ஏற்கனவே 3 நாட்கள் விசாரணை நடத்தி உள்ளனர். இந்தநிலையில் இன்று 4-வது நாளாக விசாரணை நடந்து வருகிறது.