2019 உயர்தர பெறுபேறுகளின் படி பல்கலைக்கழகங்களில் பொறியியல் மற்றும் இயற்பியல் பாடங்களுக்காக மாணவர்களை உள்வாங்குவதை இடைநிறுத்த, இடைக்கால தடை உத்தரவு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை மேலும் பரிசீலிப்பதற்காக எதிர்வரும் 16 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புவனக அலுவிஹார, எஸ்.துரைராஜா, மற்றும் யசந்த் கோத்தா கொட ஆகிய மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் தலைமையிலான குழாம் அறிவித்துள்ளது. இந்த மனு நேற்றைய தினம் எடுத்துக்கொள்ளப்படவிருந்தது.
2019 ஆம் ஆண்டின் உயர்தர பரீட்சைக்கு புதிய பாடத்திட்டத்தின் கீழ் தோற்றி சித்தியடைந்த மாணவர்களினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதிய பாடத்திட்டத்திற்கும், பழைய பாடத்திட்டத்துக்கும், மதிப்பெண்களுக்கு இடையே பாரிய வேறுபாடு காணப்படுவதாக இவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இதனால் தமக்கு பெரிய அநீதி இடம்பெற்றுள்ளதாகவும், தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து இரண்டு பாடத்திட்டங்களுக்கும் சமனான அல்லது நியாயமான இசட் மதிப்பெண்களை வழங்கும்படி உத்தரவு பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கல்வி அமைச்சர், அமைச்சின் செயலாளர், பரீட்சை ஆணையாளர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் அதன் தலைவர் அத்துடன் சட்டமா அதிபர் ஆகியோரை மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளனர்.