விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 734 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16 ஆயிரத்து 38 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 15,530 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
3,503 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. 145 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்பட வில்லை.
மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 50 ஆக உயர்ந்துள்ளது. 1,745 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்த நிலையில் 3,503 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படாத நிலை உள்ளது.
பஸ் நிலையம் போன்ற பொது இடங்களில் நோய் தடுப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாத நிலையில் நோய் பரவல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் பஸ் நிலையம் போன்ற பொது இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் நடைமுறையை உள்ளாட்சி அமைப்புகள் முற்றிலுமாக நிறுத்திவிட்டன.
மாவட்ட நிர்வாகமும் இதுகுறித்து உரிய அறிவுறுத்தல்கள் வழங்கவில்லை. கடந்த 2 தினங்களில் மாவட்டத்தில் நோய் பாதிப்பு ஏற்பட்ட 32 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டதாகவோ, வீடுகளில் தனிமைப்படுத்தபட்டதாகவோ தகவல் இல்லை.
இதிலிருந்து அவர்களுக்கு நோய் பாதிப்பு உள்ளது என்பதை மாவட்ட சுகாதார துறையினர் முறையாக தெரிவித்து உரிய அறிவுறுத்தல்கள் வழங்கினார்களா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. மொத்தத்தில் முதல்-அமைச்சர் வருகைக்கு பின்பு மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டப்பட வேண்டிய நிலையில் அதற்கு மாறாக அனைத்து நடவடிக்கைகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் இம்மாவட்டத்தில் நோய் பாதிப்பை முற்றிலும் தவிர்க்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.