புதுடெல்லி; மண்ணுளி பாம்பு, இரிடியம் முறைகேடுகளை போல் உத்தரபிரதேசத்தில் ரூ.9 லட்சத்திற்கு ‘மேஜிக் பல்ப்’ விற்று மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியின் தானா நிஜாமுதீனைச் சேர்ந்த தொழிலதிபர் நிதேஷ் மல்ஹோத்ரா, கோட்வாலி சதர் போலீசாரிடம் அளித்த புகாரில், ‘உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூரை சேர்ந்த சிலர் ‘மேஜிக் பல்ப்’ தங்களிடம் இருப்பதாக கூறினர். இந்த சிவப்பு நிற மேஜிக் விளக்கை வீட்டில் வைத்தால் தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் வீட்டிற்கு வந்து சேரும். வீட்டில் மகிழ்ச்சி, ெசல்வ செழிப்பு ஏற்படும். நோய் பாதிப்புகள் இருந்தால் அது பூரண குணமடையும் என்று கூறினர். அவர்களது பேச்சை கேட்டு, லக்கிம்பூர் சென்று அந்த மூன்று நபர்களை எனது நண்பருடன் சேர்ந்து சந்தித்தேன்.

அவர்கள், சிறப்பு காந்தங்கள் மூலம் எரியும் சிவப்பு நிற ‘மேஜிக்’ விளக்கை கொடுத்தனர். இந்த விளக்கு வசீகர தன்மை கொண்டது என்று நம்பவைத்தனர். அதன் விலை ஒன்பது லட்சம் ரூபாய் என்றனர். நானும் 9 லட்சம் ரூபாயை கொடுத்து அந்த மேஜிக் பல்பை விலைக்கு வாங்கினேன். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். வீட்டிற்கு வந்து மேஜிக் பல்பை வைத்தேன். கொரோனா வைரஸ் காரணமாக தொழிலில் பல நஷ்டங்களை சந்தித்த எனக்கு, அந்த 3 நபர்களும் கூறியபடி ‘மேஜிக்’ விளக்கு மூலம் எளிதில் பணம் சம்பாதிக்க முடியவில்லை. எந்தவொரு செல்வசெழிப்பும் ஏற்படவில்லை. எனவே அவர்கள் என்னிடம் மோசடி செய்து பணத்தை பறித்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

அதையடுத்து கோட்வாலி சதர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கினர். மோசடியில் ஈடுபட்ட லக்கிம்பூரை சேர்ந்த சுட்கன் கான், நிகாசன், இர்பான் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, மற்றொரு சிவப்பு நிற விளக்கையும், ரூ.8.87 லட்சத்தையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மண்ணுளி பாம்பு, இரிடியம் உலோக மோசடியை போன்று வடமாநிலங்களில் இதுபோன்ற ‘மேஜிக் பல்ப்’ மோசடி ெபரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.