தர்மபுரியை சேர்ந்தவர் விவேக் (வயது 29). இவர் கோவை ரத்தினபுரி அருகே உள்ள வி.சி.என். லே-அவுட்டில் தனது பெற்றோருடன் வாடகை வீட்டில் தங்கி இருந்து செல்போன் கோபுரம் அமைக்கும் வேலை செய்து வந்தார்.


கடந்த 2 வருடங்களுக்கு முன்பு விவேக்கிற்கு அந்த பகுதியில் வசிக்கும் இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்பேன் மூலமாக பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.

இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் தாய்க்கு தெரியவரவே அவர் தனது மகளை கண்டித்தார். மேலும் விவேக்குடன் பேசுவதையும் பழகுவதையும் நிறுத்துமாறு எச்சரித்தார்.

இதனால் கடந்த சில வாரங்களாக இளம்பெண் தனது காதலனுடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்து வந்தார். இது விவேக்கிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

நேற்று காலை இளம்பெண்ணின் தாய் வேலைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது இளம்பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அந்த சமயத்தில் விவேக்கு இளம்பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண் சத்தம் போட்டார்.

அப்போது விவேக் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை காட்டி சத்தம் போட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். மேலும் வா எங்கேயாவது போய் திருமணம் செய்து கொண்டு வாழலாம் வா என இளம்பெண்ணை அழைத்தார். ஆனால் அவர் வர மறுத்து விட்டார்.

இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது விவேக் தான் வைத்து இருந்த கத்தியால் இளம்பெண்ணின் கையில் குத்தினார். வலி தாங்க முடியாமல் இளம்பெண் சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தில் இருந்த உறவினர் ஓடி வந்து இளம்பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

தனது காதலி தன்னுடன் வர மறுத்ததால் வேதனை அடைந்த விவேக் இளம்பெண்ணின் வீட்டின் முன்பு வைத்து வி‌ஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார்.

இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த விவேக்கை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இது குறித்து இளம்பெண்ணின் தாய் ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் தன்னுடன் வர மறுத்த காதலியை கத்தியால் குத்திய விவேக் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.