காரைக்கால் மாவட்டத்தில், 70 கூட்டுறவு ரேஷன் கடைகளில், 120 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக, மாநிலம் முழுவதும், ரேஷன் கடை வாயிலாக வழங்கப்பட்டு வந்த இலவச அரிசி, நிறுத்தப்பட்டு, அதற்கு பதிலாக, பயனாளிகளின் வங்கி கணக்கில், பணம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனால், ரேஷன் கடைகள் மூடப்பட்டன.
இதன் காரணமாக, ரேஷன்கடை ஊழியர்கள் கடந்த 3 ஆண்டுகளாக வேலை மற்றும் சம்பளம் இன்றி தவித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 38 மாத சம்பளம் வழங்க வேண்டும், ரேஷன் கடைகளை உடனே திறக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
தொடர்ந்து மத்திய அரசு வழங்கும் இலவச அரிசியை அண்மையில் அரசு பள்ளி ஆசிரியர்களை கொண்டு வழங்கப்பட்டது. இந்த திட்டத்தை ரேஷன் கடை ஊழியர்களை கொண்டு வழங்க, அரசு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் கூட்டுறவு பால் வழங்கும் சங்க அலுவலக வளாகத்தில், மாவட்ட துணை கலெக்டர் (பேரிடர் மேலாண்மை) பாஸ்கரன், காரைக்கால் கூட்டுறவு ரேஷன் கடை சங்க தலைவர் குமாரசாமி, மாவட்ட குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை துணை இயக்குனர் தயாளன் உள்ளிட்ட அதிகாரிகள், ஊழியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதில் கூட்டுறவு ரேஷன் கடை ஊழியர் போராட்டக்குழு தலைவர் ரஹ்மத்பாஷா, செயலாளர் மனோகர் ஆகியோர் தலைமையிலான ஊழியர்கள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ரேஷன் கடை ஊழியர்கள், நிலுவையில் உள்ள 38 மாத சம்பளத்தில் 19 மாத சம்பளத்தை வழங்க வலியுறுத்தி கூட்டுறவு பால் வழங்கும் சங்கம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.