புதுடெல்லி: சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி ஒரே நேர்கோட்டில் செல்லும்போது பூமியின் நிழலானது சந்திரன் மேல் விழுந்து சந்திரனை மறைக்கும். இந்த நிகழ்வையே சந்திரகிரகணம் என்கின்றனர். இந்தாண்டு ஜனவரி, ஜூன், ஜூலை மாதங்களில் ஏற்கெனவே 3 சந்திர கிரகணங்கள் நிகழ்ந்தன. அதன்படி இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று ஏற்படுகிறது. இன்றைய சந்திரகிரகணம் பெனும்பிரல் சந்திரகிரகணம் என்று கூறப்படுகிறது. வழக்கமான சந்திரகிரகணத்தை விட இந்த கிரகணம் அதிக நேரம் நீடிக்கும். இந்தியாவிலும் கிட்டத்தட்ட 4 மணி நேரங்கள் பிற்பகல் 1.04 முதல் மாலை 5.22 வரை நிகழ்கிறது.

ஆனால் இந்தியாவில் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் சில இடங்களில் தெரிய வாய்ப்புள்ளது. ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசுபிக், அட்லாண்டிக் உள்ளிட்ட பகுதிகளில் தெளிவாக தெரியும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்தாண்டுக்கு இன்றைய சந்திரகிரகணம் கடைசி என்பதால் அடுத்த சந்திரகிரகணம் 2021ம் ஆண்டு மே 26ம் தேதி நடைபெறவுள்ளது.