தமிழகத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக கொரோனா தொற்று குறைந்துள்ளது.

இந்த நிலையில் கொரோனாவின் 2-வது அலைவீச தொடங்கி இருப்பதாகவும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் தேசிய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

அடுத்து வரும் 28 நாட்கள் மிக முக்கியமானவை என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணனும் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்காளக கொரோனா தொற்று குறைந்தே காணப்பட்டது. தினமும் 10 அல்லது 15 பேருக்கு மட்டுமே தொற்று அறிகுறி கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் தற்போது திடீரென கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது சுகாதார துறையினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக மக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 4 ஆயிரத்து 214 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 15 ஆயிரத்து 781 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது.

இதில் 15 ஆயிரத்து 449 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டனர். 57 பேர் சிகிச்சையில் உள்ளனர். 23 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். 3 ஆயிரத்து 98 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை.

இந்த நிலையில் மருத்துவ பரிசோதனை குறைக்கப்பட்டதால்தான் நோய் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதனை தவிர்த்து மருத்துவ பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் உண்மை நிலவரங்களை உடனுக்குடன் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.