மாநகரம் படம் இந்தியில் மும்பைகார் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது, இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்குகிறார்.
தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற மாநகரம் படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. மும்பைகார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்குகிறார். இப்படத்தின் மூலம் நடிகர் விஜய் சேதுபதி பாலிவுட்டில் அறிமுகமாகிறார். தமிழில் முனீஸ்காந்த் நடித்த கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில், அதனை உறுதிப்படுத்தும் வகையில், மும்பைகார் படத்தில் இடம்பெறும் விஜய் சேதுபதியின் தோற்றம் அடங்கிய புதிய புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. கோர்ட் சூட் அணிந்தபடி கையில் துப்பாக்கியுடன் இருக்கும் விஜய் சேதுபதியின் இந்த மாஸான புகைப்படம் வைரலாகி வருகிறது.
மேலும் நடிகர் விஜய் சேதுபதி இந்தியில், கிஷோர் பாண்டுரங் இயக்கும் காந்தி டாக்ஸ், அந்தாதூன் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் மெரி கிறிஸ்துமஸ் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். இதுதவிர ஷாஹித் கபூருடன் வெப் தொடர் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.