கள்ளக்குறிச்சி எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் ரியாஷ்அகமது (வயது 30). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார்.
ரியாஷ்அகமது சென்னையில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்தார். ரியாஷ்அகமதுக்கு அவரது குடும்பத்தினர் வேறுஒரு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதையறிந்த ரியாஷ்அகமதுவின் காதலி கள்ளக்குறிச்சியில் உள்ள அவரது வீட்டுக்கு வந்தார்.
வீட்டில் இருந்தவர்களிடம் ரியாஷ்அகமதும் நானும் காதலித்து வருகிறோம். இதனால் வேறு பெண்ணுடன் அவருக்கு திருமணம் செய்து வைக்கக்கூடாது என்று கூறினார். அப்போது வீட்டில் இருந்தவர்கள் அந்த பெண்ணை சமாதானபடுத்தி அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு ரியாஷ்அகமதுக்கு அவரது பெற்றோர் அவசர அவசரமாக வேறுஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்தனர்.
தகவல் அறிந்த சென்னையை சேர்ந்த காதலி செல்போன் மூலம் ரியாஷ்அகமதுவை தொடர்பு கொண்டு மிரட்டினார்.
நேற்று மாலை ரியாஷ்அகமது ஏமப்பேர் பகுதியில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் அணிந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல் ரியாஷ்அகமதுவை பின் தொடர்ந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை வழிமறித்தனர்.
பின்னர் அந்த கும்பல் அரிவாள் உள்பட பயங்கர ஆயுதங்களால் ரியாஷ்அகமதுவை சரமாரியாக வெட்டியது. இதில் ரியாஷ்அகமது அலறி துடித்து கீழே விழுந்தார். சத்தம்கேட்டு அந்த பகுதி பொதுமக்கள் திரண்டனர். உடனே அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ரியாஷ்அகமதுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் ரியாஷ்அகமதுவின் உறவினர் புகார் செய்தார். அதில் அதில் ரியாஷ் அகமதுவை அவரது காதலி கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்றதாக எங்களுக்கு சந்தேகம் உள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது காதலி மற்றும் 6 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடிவருகின்றனர்.