மேல் மாகாணத்தை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்ட போதிலும் அங்கிருந்து வெளியேறி ஏனைய மாவட்டங்களுக்கு செல்லும் நபர்கள் குறித்த தகவல்களை சேகரித்து அவர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு அனுப்புமாறு சகல காவல்துறை நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காவற்துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 15 ஆம் திகதி வரை எந்தவொரு காரணத்திற்காகவும் மேல் மாகாணத்தில் இருந்து வெளிமாகாணங்களுக்கு செல்லவதற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத்தடை அமலில் இருக்கும் காலகட்டத்தில் ஒருவர் மேல் மாகாணத்தில் இருந்து இன்னொரு பிரதேசத்துக்குள் பிரவேசித்தால், அவர் 15 நாட்களுக்கு பின்னரே அங்கிருந்து வெளியேற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொட்டாஞ்சேனை பகுதியில் இயங்கும் சீன கட்டுமான தளம் ஒன்றில் பணியாற்றிய நான்கு பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டது.
அவர்களில் இரண்டு சீனர்களும் அடங்குகின்றனர். எவ்வாறாயினும், தங்களது கட்டுமான நடவடிக்கைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்று சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 350 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் 625 பேருக்கு புதிதாக கொவிட் 19 தொற்றுறுதியானதுடன், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.
கொவிட்-19 தொற்றிலிருந்து நேற்று மேலும் 646 பேர் குணமடைந்துள்ளதற்கு அமைய குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 183 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
5 ஆயிரத்து 121 கொவிட்-19 நோயாளர்கள் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை திவுலுபிட்டிய ஆடைத்தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன்சந்தை கொவிட் கொத்தணிகளில் இருந்து அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 858 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை. நாட்டில் கொவிட்-19 தொற்று நோயின் காரணமாக நேற்றைய தினத்தில் மாத்திரம் 5 மரணங்கள் பதிவாகியதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் கொவிட் 19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.