கார்த்திகை தீபம்

Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் ‘கார்த்திகை தீபம்’.

சாமுண்டீஸ்வரியின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த பீட்டர் திட்டமிட்டு வரும் நிலையில், கார்த்திக் தனது சாமர்த்தியத்தால் அந்தச் சதியை முறியடிக்கிறார்.

அதே நேரத்தில், ஸ்ரேயாவின் நடவடிக்கைகள் மயில்வாகனத்திற்குப் புதிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன.

பீட்டரின் பின்னணியைத் தெரிந்துகொண்ட கார்த்திக்

சாமுண்டீஸ்வரியின் வீட்டில் இருக்கும் பீட்டர் மீது கார்த்திக்குக்கு ஏற்கனவே சந்தேகம் இருந்தது. இதனால், வெளிநாட்டில் இருக்கும் தனது நண்பரிடம் பீட்டரின் பாஸ்போர்ட் விவரங்களை அனுப்பி, அவனைப் பற்றிய முழு தகவல்களையும் விசாரிக்கச் சொல்கிறார்.

நண்பர் அனுப்பிய தகவல்களைப் பார்த்த கார்த்திக், பீட்டர் சாதாரண ஆள் கிடையாது, ஆபத்தானவன் என்பதைத் தெரிந்துகொள்கிறார்.

கடைசி நிமிடத்தில் தப்பிய சாமுண்டீஸ்வரி!

இதற்கிடையில், சாமுண்டீஸ்வரியின் வீட்டில் ராஜராஜன், ரோகிணி, ரேவதி, மயில்வாகனம் என அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அதே இடத்தில் ஸ்ரேயாவும் பீட்டரும் அருகருகே அமர்ந்திருக்க, பீட்டர் தனது லேப்டாப் மூலம் சாமுண்டீஸ்வரியைக் கொலை செய்யும் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்குகிறான்.

அவன் செய்துகொண்டிருக்கும் சாப்ட்வேர் வேலை 99 சதவீதம் முடிந்துவிடுகிறது. இன்னும் ஒரு நொடி தாமதித்திருந்தாலும் சாமுண்டீஸ்வரியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும். சரியான நேரத்தில் ரேவதிக்கு போன் செய்யும் கார்த்திக், சாமுண்டீஸ்வரியிடம் உடனே பேச வேண்டும் என்று சொல்கிறார்.

ரேவதி போனை சாமுண்டீஸ்வரியிடம் கொடுக்க, அவர் அங்கிருந்து எழுந்து சென்று பேசுவதால் பீட்டரின் திட்டம் கடைசி நொடியில் தோல்வியடைகிறது.

கார்த்திக் எச்சரித்தும் நம்ப மறுக்கும் சாமுண்டீஸ்வரி!

போனில் பேசும் கார்த்திக், பீட்டர் ஒரு கிரிமினல் போல இருக்கிறான் என்றும், அவனிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் சாமுண்டீஸ்வரியை எச்சரிக்கிறார். ஆனால் சாமுண்டீஸ்வரி, "சந்திரகலா விஷயத்தில் நீ சொன்னதை முதலில் நான் நம்பவில்லை. ஆனால் அவள் கெட்டவள் என்பது ஆதாரத்துடன் தெரிந்துவிட்டது.

ஸ்ரேயா அப்படியெல்லாம் கிடையாது. அவள் என்னுடைய பழைய தோழி. என்னை அவள் காயப்படுத்த மாட்டாள். அவள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது" என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிடுகிறார்.

சதுரங்க விளையாட்டில் சாமுண்டீஸ்வரியை சிக்க வைக்க முயற்சி!

முதல் முயற்சி தோல்வியடைந்ததால், ஸ்ரேயா இந்த விஷயத்தை சந்திரகலாவிடம் போனில் தெரிவிக்கிறாள். அடுத்ததாக, சாமுண்டீஸ்வரியை 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஒரே இடத்தில் அமர வைக்க வேண்டும் என்பதற்காக, அவருடன் செஸ் விளையாடத் தொடங்குகிறாள்.

சாமுண்டீஸ்வரி விளையாட்டில் கவனம் செலுத்திக் கொண்டிருக்க, அருகில் இருக்கும் பீட்டர் மீண்டும் தனது சதியைத் தொடங்குகிறான்.

ஏற்கனவே கார்த்திக் இந்த விஷயத்தை மயில்வாகனத்திடம் சொல்லி எச்சரித்திருந்ததால், அவர் பீட்டரைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறார். பீட்டர் ஏதோ தவறு செய்வதை கவனித்த மயில்வாகனம், ஜூஸ் கொண்டு வருவது போல சென்று, பீட்டரின் லேப்டாப் மீது ஜூஸைக் கொட்டிவிடுகிறார். இதனால் லேப்டாப் செயலிழந்து, பீட்டரின் திட்டம் மீண்டும் தடைபடுகிறது.

ஸ்ரேயாவின் கோபத்தால் மயில்வாகனத்துக்கு ஏற்பட்ட சந்தேகம்!

லேப்டாப் பழுதானதும் பீட்டரை விட ஸ்ரேயா தான் அதிகமாக கோபப்படுகிறாள். மயில்வாகனத்தை கடுமையாகத் திட்டவும் செய்கிறாள். இதைப் பார்த்த மயில்வாகனத்துக்கு ஸ்ரேயா மீது சந்தேகம் அதிகமாகிறது.

உடனே கார்த்திக்குக்கு போன் செய்து, "லேப்டாப் பழுதானதுக்கு பீட்டரை விட ஸ்ரேயா தான் அதிகமாக கோபப்படுறா. இதுல ஏதோ மர்மம் இருக்கு" என்று சொல்கிறார். இதனால் ஸ்ரேயாவின் உண்மையான முகம் விரைவில் வெளிவருமா? சாமுண்டீஸ்வரியைச் சுற்றி நடக்கும் சதிகளை கார்த்திக் முழுமையாக முறியடிப்பாரா? என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.