மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் சகல வகுப்புக்களும் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. சுகாதார வழிமுறைகளின் பிரகாரம் பாடசாலை நடத்தப்படும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது. 

மேல் மாகாணத்தில் உள்ள முன்பள்ளிகளும் இன்று ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சின் அனுமதி கிடைத்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார். 

மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் உள்ள முன்பள்ளிகள் சுகாதார வழிகாட்டல்களின் பிரகாரம் நடைபெற்று வருகின்றன. 

இதேவேளை,பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டவுடன் பரீட்சை மற்றும் ஏனைய போட்டிகளுக்கு மாணவர்களை ஈடுபடுத்துவது பொருத்தமில்லை என்று பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டிருக்கும் சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளினதும் முதலாம் தவணைக்கான கற்றல் நடவடிக்கை அடுத்த மாதம் 9ஆம் திகதி நிறைவடையவுள்ளது. இரண்டாம் தவணை அடுத்த மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 

பாடசாலைகளில் இதுவரை ஆரம்பிக்கப்பட்டிருக்கும் வகுப்புக்களுக்கு மாணவர்களின் வருகை உயர்ந்த மட்டத்தில் இருப்பதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்திருக்கின்றார். பாடசாலை ஆரம்பிப்பது தொடர்பில் பெற்றோர்களும் சிறந்த அக்கறை காட்டுகின்றனர் என அவர் கூறினார். 

இது ஒருபுறமிருக்க யாழ்ப்பாணம் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் ஒரு வார காலத்துக்கு மூடப்படுவதாக மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். 

இதற்கமைவாக, நாளை தொடக்கம் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள் மூடப்படும். ஏனைய கல்வி வலயங்களிலுள்ள பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் அனைத்தும் வழமை போல் இடம்பெறும் என்றும் அவர் கூறினார். 

யாழ்ப்பாணத்தில் சடுதியாக அதிகரித்துச் செல்லும் கொவிட் வைரஸ் தொற்றை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.