அமெரிக்காவில் இன்ஸூரன்ஸ் பணத்துக்காக குடும்பத்தைக் கொலை செய்த நபருக்கு 212 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இன்ஸூரன்ஸ் பணத்துக்காக குடும்பத்தைக் கொலை செய்த நபருக்கு 212 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அலி எஃப். எல்மேசாயென் (Ali F. Elmezayen) என்ற நபர் 2015-ம் ஆண்டு லாஞ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள துறைமுகத்துக்கு மனைவி மற்றும் தனது இரண்டு குழந்தைகளையும் காரில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக காரானது கப்பல்கள் அணிவகுத்து நிற்கும் கடற்பகுதியில் சீறிப்பாய்ந்தது. அந்த விபத்தில் காருக்குள் பின் இருக்கையில் அமர்ந்திருந்த எல்மேசாயென்னின் 8 வயது மற்றும் 12 வயது மகன்கள் இருவரும் நீரில் மூழ்கி இறந்தனர். அவரது மனைவியை அங்கிருந்த மீனவர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். நீச்சல் தெரிந்த எல்மேசாயென் மட்டும் குடும்பத்தினரைக் காப்பாற்ற முயற்சி செய்யாமல் அங்கிருந்து தப்பியுள்ளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. எல்மேசாயென் கார் நீரில் பாய்ந்தது, தற்செயலானது அல்ல, அவரால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என தெரியவந்தது. அதாவது, விபத்து நடக்கும் 2 ஆண்டுகளுக்கும் முன்பே சுமார் 8க்கும் மேற்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனங்களில் 3 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான விபத்து காப்பீடுகளை எல்மேசாயென் எடுத்துள்ளார். தனது வருமானத்துக்கு அதிகமாக இருந்தாலும், அந்த இன்சூரன்ஸ் சந்தா தொகைகளை மாதம் தவறாமல் செலுத்தி வந்துள்ளார். இரண்டு ஆண்டுகளில் பலமுறை இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு சென்ற அவர், மனைவி, மகன்கள் உள்ளிட்டோர் விபத்தில் இறந்தால் எவ்வளவு கிடைக்கும், எப்படி கிடைக்கும் என்பது குறித்து விசாரித்துள்ளார்.
அப்போது, இன்சூரன்ஸ் எடுத்த சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவேளை விபத்து நடந்தால், விபத்துக்காப்பீடாக 3 மில்லியன் டாலர்களையும் கிளைம் செய்துகொள்ளலாம் என காப்பீட்டு நிறுவனங்கள் கூறியுள்ளன. இதற்காக காத்திருந்த அல்மேசாயென், 2015-ம் ஆண்டு விபத்து காப்பீடு பணம் கிளைம் செய்வதற்கான நேரம் வந்தபிறகு, சுமார் 12 நாட்கள் கழித்து மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் லாஞ் ஏஞ்ல்ஸ் நகர துறைமுகத்துக்கு அழைத்துச் சென்று காரை கடலுக்குள் மூழ்கவைத்து கொலை செய்துள்ளார். பின்னர், இன்சூரன்ஸ் பணத்தை எடுத்து எகிப்து நாட்டில் ஆடம்பர மாளிகை மற்றும் நிலங்களையும் வாங்கியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இதுபோன்ற கொடூர எண்ணம் உடைய மனிதரை தான் இதுவரை பார்த்ததில்லை என்று கூறினார். தண்ணீருக்குள் துடிதுடித்து இறந்த அந்த இரு குழந்தைகளின் நிலையை தன்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை என தெரிவித்த அவர், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அல்மேசாயென்னுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதாக தெரிவித்தார். அதன்படி, அல்மேசாயென்னுக்கு 212 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தார்.