நேற்றைய தினம் விசாகப்பட்டிணத்தில் ஒரு ஆசிரியை அடித்து சிறுவன் உயிர் இழந்த சம்பவம் எல்லோரையும் துயரத்தில் ஆழ்த்துகிறது. அதைப்போல், அவை பல கேள்விகளையும் எழுப்பி இருக்கிறது. ஒவ்வொருவர் மனதிலும் எதற்காக அந்த சிறுவன் இறந்தான்? என்ற பல குழப்பங்கள் சூழ்ந்து உள்ளது.

அந்த சிறுவன் ஆசிரியர் அடித்த அந்த ஒரு நொடியில் உயிர் இழந்திருக்க கூடுமா?அல்லது என்ன நடந்திருக்க கூடும் என்பதை பற்றி சிவகங்கை மருத்துவர் ஒருவர் தெளிவாக விளக்கம் கொடுக்கிறார். அதை தெரிந்து கொள்வோம்.

அவர் கூறுவதாவது,

ஆந்திர மாநிலம் விசாகபட்டிணம் நகரத்தில் ஆசிரியை ஒருவர் அடித்ததில் மயங்கி விழுந்து சிறுவன் உயிரிழிந்திருப்பது ஆழ்ந்த கவலையையும் பலரின் கவனத்தையும் கோரியிருக்கிறது. சிசிடிவியில் பதிவான நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும் போது ஆசிரியை வரிசையில் வரும் மாணவர்களில் ஒருவரின் ஆடைகளைக் களைய முற்படுகிறார் அடுத்து அவனை கன்னத்தில் அறைகிறார் சிறுவன் மூர்ச்சையாகி முன்னோக்கி விழுகிறான்.

அடுத்து அவன் மரணமடைந்தான் என்ற செய்தி வருகிறது. இந்த நிகழ்வை விளக்கமாகப் பார்ப்போம் மாணவ மாணவிகளை ஆடைகளைக் களைவது உள்ளிட்ட தண்டனைகள் உளவியல் ரீதியாக பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை.

பள்ளிகள் / வீடுகளில் ஏதேனும் தவறு செய்து விட்டால் குழந்தைகளின் ஆடைகளைக் களைந்து அவர்களை நிர்வாணப்படுத்தி தண்டனை கொடுப்பது கொடுமையானது. அது அவர்களின் மனதில் பெரிய வடுக்களை ஏற்படுத்தும் செயலாகும்.

இங்கே இதை எழுதும் நானும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆரம்ப பள்ளி காலங்களில் மேல் சட்டையைக் கழட்டி சக மாணவ மாணவிகள் முன் அவமானப்படுத்தி கொடுக்கும் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளேன்.

இன்னும் நினைவில் உள்ளது. இது தவறானது. ஆபத்தானது. ஆழ்மன வக்கிரங்களை வெளிக்கொணரும் கொடுஞ்செயல். போக்சோ சட்டங்கள் அமல்படுத்தப்படும் இக்காலத்தில் இது போன்ற அவமானப்படுத்தப்படுத்தும் உளவியல் ரீதியான தண்டனைகள் தவறானவை.

எப்போதும் ஆசிரியரோ பெற்றோரோ தங்களது ஆழ்மன வக்கிரங்களையும் , பொது சமூகத்தில் அடக்கி வைத்த மிருகத்தனத்தையும் கட்டவிழ்த்து விட்டு கழிவறக்கம் செய்யும் இடமாக குழந்தைகளையும் சிறார் சிறுமியரையும் பார்க்கும் எண்ணத்தைக் கைவிட வேண்டும். ஒருவரிடம் மாற்றம் கொண்டு வர அன்பை விட சிறந்த ஆயுதம் ஏதுமில்லை. அன்பினால் ஆகாதது.

வேறொன்றினாலும் ஆகாது. சிறார் சிறுமியரை திருத்தும் நோக்கில் தரப்படும் தண்டனைகள் என்பவை அவர்களுக்கு வழி ஏற்படுத்துவதாக அமைய வேண்டுமே அன்றி வலி ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது.

புத்தகப்பையுடன் எல்நினோ வெயிலில் மைதானத்தை பத்து முறை சுற்றி வரக் கூறுவது வகுப்புக்கு வெளியே ஆயிரம் முறை உக்கி போடக்கூறுவது சக மாணவ மாணவிகள் முன் அரை நிர்வாணப் படுத்தி அவனாமப்படுத்துவது போன்றவை தண்டனைகள் அல்ல.

ஆழ்மன வக்கிரங்கள் ஆகும். பெற்றோரும் கூட தாங்கள் எங்குமே காட்ட முடியாத கோபத்தைக் கொட்டும் குப்பைத் தொட்டிகளாக குழந்தைகளை நினைப்பது எவ்வளவு பெரிய தவறு. அன்பைக் காட்டி தப்பும் தவறும் செய்யும் போது அதட்டி திட்டி லேசாக கொஞ்சம் சினத்தையும் அவ்வப்போது காட்டி வளர்ப்பது நல்ல வளர்ப்பு முறை.

மாறாக ஒரே கொஞ்சல்ஸ் நல்ல செல்லம் எதிர்த்து பேச ஆளே இல்லை என்ற அளவில் வளர்த்தாலும் பிள்ளை கெட்டு விடும். இரண்டுக்கும் இடையே சரிசம நிலையை உருவாக்கி அதன் படியே பிள்ளைகளை வளர்க்க வேண்டும்.

ஆசிரியர்களும் தங்களின் பணி என்ன? தாங்கள் எதற்கு குழந்தைகளிடம் தேவையற்ற சினத்தைக் காட்டுகிறோம் என்று சிந்திக்க வேண்டும் சரி இந்த நிகழ்வுக்கு வருவோம் அந்த ஆசிரியரை ஒன்றாம் வகுப்பு மாணவனை கன்னத்தில் அறைகிறார்.

உடனே அவன் சுருண்டு விழுகிறான் அந்த மாணவன் தான் ஏற்கனவே அச்சத்தில் நடுங்கி அழுகிறானே அவனை அறையவும் வேண்டுமா? கபாலம், முகம் ,வயிறு, நெஞ்சாங்கூடு ஆகிய பகுதிகள் மிகவும் ஆபத்தானவை.

அங்கே அடி வாங்கும் போது திடீரென மூளை ஸ்தம்பித்து மூர்ச்சை நிலை ஏற்படலாம். குழந்தைக்கு ஏற்கனவே இதயம் சார்ந்த பிறவிக் குறைபாடு ஏதேனும் இருந்திருக்கலாம். அதுவரை அது வெளியே தெரியாமல் இருந்திருக்கலாம். அதிகமான மன மற்றும் உடல் அழுத்தம் ( அழுது கொண்டே இருந்தது) காரணமாக ஏற்கனவே குழந்தை சோர்வாகி இருந்திருக்கலாம்.

முதலில் குழந்தைகளை நீண்ட நேரம் நிற்க வைப்பதே நல்லதல்ல. அதிலும் வெயிலில் நிற்க வைப்பது ஆபத்தானது. இதயம் சார்ந்த பிரச்சனை + திடீர் உடல் & மன அழுத்தம் + சோர்வு + கன்னத்தில் வாங்கி அடி என்று குழந்தை சரிந்துள்ளது.

இதய செயல் முடக்கம் ஏற்பட்டிருக்கும் வாய்ப்பு அதிகம். சிறார் சிறுமியருக்கு இதய ரத்த நாள அடைப்பு ( மாரடைப்பு) ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு. உடனே சிபிஆர் முதலுதவி அளிக்கப்பட்டிருந்தால் குழந்தை பிழைக்க வாய்ப்பு இருந்திருக்கும். இங்கே ஆசிரியர் தெரிந்தே குழந்தையைக் கொன்றாரா? இல்லை.

எந்த ஆசிரியரும் அப்படிச் செய்வதில்லை. ஆனால் குழந்தையின் சுதந்திரத்தையும் வரம்புகளையும் மீறினாரா? என்றால் ஆம்.. அவர் குழந்தையிடம் காட்டப்படவே தேவையற்ற வன்முறையை கட்டவிழ்த்து விட்டு குழந்தையின் மரணத்திற்கு ஒரு காரணமாக அமைந்து விட்டார்.

இதற்கு அவரின் ஆழ்மன வக்கிரமும் தவறான தண்டனை முறைகளை வழங்கி குழந்தையைத் திருத்தலாம் என்ற தவறான வழிநடத்தலும் வன்முறைப் பிரயோகமும் அந்தக் குழந்தையின் இறப்பிற்குப் காரணமாக அமைந்து விட்டது. இதே போன்று செய்யும் தாய்மார்களும் பெற்றோர்களும் தாத்தா பாட்டிமார்களும் நமது சமூகத்தில் உண்டு நாம் அனைவரும் திருந்துவோமாக..

அன்பைக் கொண்டு ஆகாதது எதுவும் வேறெதைக் கொண்டு ஆகாது என்றுணர்வோம். திருத்துகிறேன் என்று நாம் குழந்தைகளுக்கு தரும் தண்டனைகளில் பெரும்பான்மை நம் ஆழ்மன வக்கிரக் கழிவுகளே அன்றி வேறில்லை உணர்ந்தால் தெளிவு பிறக்கும் மாற்றமும் பிறக்கும்

நன்றி

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை

விசாகபட்டிணம்: ஆசிரியை அடித்து சிறுவன் இறந்த துயர் நிகழ்வு: மருத்துவர் சொல்வது என்ன? | What Really Happend In Vizag School Kid Death