சீனாவின் உகானில் தோன்றிய கொரோனா தொற்று உலகம் முழுவதையும் ஆக்கிரமித்து இருக்கும் நிலையில், இங்கிலாந்தில் உருமாறிய புதிய கொரோனா ஒன்றும் பரவி வருகிறது. ஏற்கனவே இருக்கும் கொரோனாவை விட பல மடங்கு வீரியமாக பரவும் இந்த வைரசில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக பல நாடுகள் இங்கிலாந்துடனான போக்குவரத்தை துண்டித்துள்ளன.
எனினும் டென்மார்க், ஆஸ்திரேலியா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளை இந்த வைரஸ் சென்று சேர்ந்திருக்கிறது. இங்கிலாந்தில் இருந்து திரும்பியவர்கள் மூலம் இந்தியாவிலும் இந்த வைரஸ் தனது கணக்கை ஏற்கனவே தொடங்கி விட்டது.
அந்த வகையில் நேற்று முன்தினம் வரை நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று மேலும் 4 பேருக்கு இந்த உருமாறிய புதிய தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் புதிய கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆகி இருக்கிறது. அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரிகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதிக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.