பெங்களூரை சேர்ந்த தொலைக்காட்சி நடிகை ஒருவர் விஷம் குடித்து கொண்டே செல்பி எடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரை சேர்ந்த சந்தனா என்ற தொலைக்காட்சி நடிகை பல கன்னட சீரியல்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவருக்கும் தினேஷ் என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த காதலுக்கு இரு வீட்டார் சம்மதம் தெரிவித்ததால் விரைவில் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது

இந்த நிலையில் நேற்று திடீரென நடிகை சந்தனா தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதை பார்த்த அவரது குடும்பத்தினர் அலறியடித்து மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சந்தனாவின் செல்போனில் ஒரு செல்பி வீடியோ இருப்பதை போலீசார் பார்த்தனர். அதில் அவர் விஷம் குடித்து கொண்டே தன்னுடைய மரணத்திற்கு தினேஷ் தான் காரணம் என்று கூறியிருந்தார். இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சந்தனா, தினேஷை காதலித்தபோது 5 லட்ச ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்ததாகவும் மேலும் தன்னை திருமணம் செய்வதில் தினேஷுக்கு விருப்பமில்லை என்றும், தன்னுடைய பணத்தின்மீதே தினேஷின் கண் இருந்தது என்பதை சந்தனா தெரிந்து கொண்டதாகவும் இதனை அடுத்து தன்னை திருமணமும் செய்யாமல் தன்னுடைய பணத்தையும் கொடுக்காமல் ஏமாற்றி வந்த தினேஷால் மனமுடைந்த சந்தனா தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது

இந்த நிலையில் சந்தனாவின் தற்கொலை குறித்த செய்தி வெளியானவுடன் தினேஷ் தலைமறைவாகிவிட்டதாகவும் அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது