15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாவுக்கு பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.
வரும் கல்வியாண்டு முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

நாடாளுமன்றம் ஒருமனதாக ஒப்புதல்
அப்போது, "எங்கள் நாட்டுக் குழந்தைகளின் மூளை விற்பனைக்கான பொருள் அல்ல.அமெரிக்கா அல்லது சீனாவில் உருவாக்கப்படும் செயலிகள், பிரான்ஸ் குழந்தைகளின் சிந்தனைகளையும் உணர்வுகளையும் கட்டுப்படுத்த அனுமதிக்க முடியாது" என்று அவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்தச் சூழலில், 15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா, பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வாக்கெடுப்புக்கு வந்தது. இதில் அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, வரும் செப்டம்பர் 1 முதல் பிரான்ஸில் 15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு சட்டப்பூர்வமாகத் தடை அமலுக்கு வருகிறது.
இந்தச் சட்டத்தின் மூலம், சிறார்களின் சமூக வலைதளப் பயன்பாட்டிற்கு இவ்வகையான முழுமையான கட்டுப்பாட்டை அமல்படுத்திய ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் நாடு என்ற பெருமையை பிரான்ஸ் பெற்றுள்ளது.

ஏற்கெனவே 15 வயதுக்கு உட்பட்டோரின் பெயரில் தொடங்கப்பட்டுள்ள சமூக வலைதளக் கணக்குகளை முடக்குவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நான்கு மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய விதிமுறைகளை சமூக வலைதள நிறுவனங்கள் முறையாகப் பின்பற்றுகிறதா என்பதை பிரான்ஸ் தகவல் தொழில்நுட்ப ஒழுங்குமுறை அமைப்பான ஆர்காம் (ARCOM) தொடர்ந்து கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
