ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (வெள்ளிக்கிழமை) திறக்கப்படவுள்ள நிலையில் 250 பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘ தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி நடையை திறந்து வைப்பார். அன்றைய தினம் மற்ற பூஜைகள் நடைபெறாது.

மறுநாள் 17ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் உள்பட வழக்கமான பூஜைகள் நடைபெறும். இந்த பூஜை வருகிற 21ஆம் திகதி வரை நடைபெறும்.

தினமும் 250 பேர் மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க படுவார்கள். அவர்கள் தரிசனத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக பெறப்பட்ட கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழை கொண்டுவர வேண்டும். நிலக்கல்லில் கொரோனா பரிசோதனை நடத்தப்படும்.

பம்பையில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பக்தர்கள் குளிப்பதற்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.