மார்ச் 2-ம் தேதி அணலிவகை பாம்பு கடித்த அன்று சத்தம் போட்டு அலறினார். எனவே, இரண்டாவது முறை பாம்பைக் கடிக்க விடும்போது அவர் சத்தம்போடாமல் இருப்பதற்காக அதிகமான தூக்க மாத்திரை கொடுத்து மயக்கமடையச் செய்ய முடிவு செய்தேன்.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் உத்ராவை பாம்புகளால் கடிக்க வைத்து நூதன முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. உத்ராவின் கணவன் சூரஜ் இந்தக் கொலையைச் செய்ததுதான் அதிர்ச்சிகரமானது. 2018-ம் ஆண்டு உத்ராவுக்கும் பத்தணம்திட்டா மாவட்டம் பறக்கோடு பகுதியைச் சேர்ந்த சூரஜுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 100 பவுன் நகை, சொத்து, கார் எனக் கைநிறைய வரதட்சணை வழங்கியுள்ளனர் உத்ராவின் பெற்றோர். இவர்களுக்கு 1 வயதில் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் அதிக வரதட்சணை வேண்டும் என ஆசைப்பட்டு உத்ராவுக்கு மனதளவில் டார்ச்சர் கொடுத்துள்ளார் சூரஜ். ஆனாலும், எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு வாழ்ந்துள்ளார் உத்ரா. இருந்தாலும் உத்ராவை ஆதாரமே இல்லாமல் தீர்த்துக்கட்ட முடிவுசெய்த சூரஜ் ஆறு மாதங்களாகத் திட்டமிட்டு பாம்புமூலம் கொலை செய்வது என முடிவுக்கு வந்திருக்கிறார். அதற்காக யூடியூபில் தேடிப்பார்த்து கல்லுவாதக்கல் பகுதியைச் சேர்ந்த பாம்புபிடிக்கும் சுரேஷ் என்பவரைத் தொடர்புகொண்டார். அவரிடம் வீட்டில் எலித்தொல்லை இருப்பதாகக்கூறி அணலி வகை பாம்பை பிப்ரவரி மாத இறுதியில் வாங்கியுள்ளார் சூரஜ். அந்தப் பாம்பை சூரஜ் வீட்டுக்கே கொண்டுவந்து கொடுத்துள்ளார் பாம்புபிடிகாரரான சுரேஷ். அதுமட்டுமல்லாது பாம்பைக் கையாளும் விதத்தையும் சூரஜுக்கு கற்றுக்கொடுத்துள்ளார்.

அந்தப் பாம்பைக்கொண்டு மார்ச் 2-ம் தேதி உத்ராவை கடிக்க வைத்துள்ளார் சூரஜ். இரவு நேரத்தில் சத்தம்போட்டு கத்திய உத்ராவை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அதிர்ஷ்டவசமாக அந்தச் சமயத்தில் உத்ரா பிழைத்துக்கொண்டார். அதன் பின்னர் தொடர் சிகிச்சைக்காக அஞ்சலில் உள்ள தன் தாய் வீட்டில் தங்கியிருந்தார். இதற்கிடையில் தங்களது விவசாய நிலத்தில் எலித்தொல்லை இருப்பதாகக்கூறி பாம்புபிடிக்கும் சுரேஷிடம் 10,000 ரூபாய் கொடுத்து கருமூர்க்கன் (கருநாகம்) பாம்பை வாங்கியுள்ளார். அந்தப் பாம்பை பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்துக்கொண்டு கடந்த 6-ம் தேதி உத்ராவின் வீட்டுக்கு சென்றுள்ளார். அன்று இரவு 2.30 மணி அளவில் அந்தப் பாட்டிலில் இருந்த பாம்பை உத்ராவின் மீது விட்டு அவரை கடிக்க வைத்துள்ளார். இரண்டு முறை பாம்பு கடிப்பதைப் பார்த்துக்கொண்டே நின்றுள்ளார் சூரஜ். பின்னர், அவர் இறந்ததை உறுதி செய்த பிறகு தூக்கம் வராமல் கட்டிலில் உட்கார்ந்து இருந்துள்ளார். அதிகாலையில் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். அதன்பிறகு உத்ராவின் அம்மா அவரை எழுப்பியபோது அவர் இறந்தது தெரியவந்தது.

இந்த நிலையில்தான் சூரஜ் மீது உத்ராவின் அம்மாவுக்கு சந்தேகம் வந்தது. மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக போலீஸில் புகார் கொடுத்தார். அதன்பிறகு சூரஜின் மொபைல் நம்பரை சோதித்தபோது அவர் பாம்புபிடிக்கும் சுரேஷுடன் அடிக்கடி பேசியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சூரஜ் மற்றும் சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரையும் வரும் சனிக்கிழமை வரை போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட் அனுமதி அளித்துள்ளது. அவர்களிடம் நடத்தும் விசாரணையில் தினமும் புதுப்புது தகவல்கள் வெளியாகிவருகின்றன. பாம்பு கடிக்கும்போது உத்ரா ஏன் கத்தவில்லை என்பது போன்ற சந்தேகங்களுக்கு இப்போது விடை கிடைத்துள்ளது.

அணலி,கருமூர்க்கன்; நள்ளிரவு 2.30 மணி ...

மனைவியைக் கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்ட சூரஜ்

விசாரணையில் சூரஜ், ``கடந்த 6-ம் தேதி உத்ராவின் வீட்டுக்கு பிளாஸ்டிக் பாட்டிலில் பாம்பு கொண்டு சென்றதுடன், தூக்க மாத்திரையும் எடுத்துச் சென்றேன். மார்ச் 2-ம் தேதி அணலிவகை பாம்பு கடித்த அன்று சத்தம் போட்டு அலறினார். எனவே, இரண்டாவது முறை பாம்பைக் கடிக்க விடும்போது அவர் சத்தம்போடாமல் இருப்பதற்காக அதிகமான தூக்க மாத்திரை கொடுத்து மயங்க வைக்க முடிவு செய்தேன். எனவே, பாயசத்திலும் பழச்சாற்றிலும் தூக்கமாத்திரை கலந்து, இரண்டு முறையாகக் கொடுத்தேன். அதனால் பாம்பு கடிக்கும்போது உத்ரா கத்தவில்லை" எனக் கூறியதாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

உத்ராவுக்கும் சூரஜுக்கும் பிறந்த குழந்தை இப்போது உத்ராவின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திருமணத்தின்போது உத்ராவுக்கு கொடுத்த நகைகளை சூரஜ் ஒரு வங்கி லாக்கரில் வைத்துள்ளதாகக் கூறியுள்ளார். நகைகளைக் கைப்பற்றும் விதமாக அந்த வங்கி லாக்கரை திறந்து பார்க்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.