ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும், இடையே கடந்த 2015-ம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதில் தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை இல்லை என ஈரான் உறுதியளிக்க, அதற்கு பிரதிபலனாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த ஐ.நா. பொருளாதார தடைகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டது.
எனினும் இந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள நிபந்தனைகளை ஈரான் மீறினால், அந்த நாட்டின் மீது ஐ.நா. தடையை மீண்டும் அமல்படுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மற்ற எந்த நாட்டுக்கும் உரிமை உண்டு என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அம்சம் ‘மீள் தடை’ என்றழைக்கப்படுகிறது.
இதனிடையே அமெரிக்காவில் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தில் பல்வேறு குறைகள் இருப்பதாக கூறி வந்த டிரம்ப் கடந்த 2018-ம் ஆண்டு இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தார். அப்போது தொடங்கி இப்போது வரை ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடுமையான மோதல் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் அணுசக்தி ஒப்பந்தத்தின் மீள் தடை அம்சத்தை பயன்படுத்தி ஈரான் மீது மீண்டும் ஐ.நா. பொருளாதாரத் தடைகளை அமல்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சிகளை மேற்கொண்டது.
எனினும் அமெரிக்கா அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிவிட்டதால், தற்போது அதில் இடம் பெற்றுள்ள மீள் தடை அம்சத்தை பயன்படுத்தி அமெரிக்காவால் ஈரான் மீது தடை விதிக்க முடியாது என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மற்ற நாடுகள் தெரிவிக்கின்றன. ஆனால், அமெரிக்கா தனது முடிவில் தீர்க்கமாக இருந்தது.
அதன்படி ஈரான் மீதான ஐ.நா. பொருளாதார தடைகள் அனைத்தும் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா நேற்று அறிவித்தது. அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ இதனை அறிவித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
ஈரான் மீது முன்னர் நிறுத்தப்பட்ட அனைத்து ஐ.நா. பொருளாதாரத் தடைகளையும் மீண்டும் அமல்படுத்துவதை அமெரிக்கா வரவேற்கிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2231-ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈரான் யுரேனியம் செறிவூட்டல் மற்றும் மறு செயலாக்கம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான தடை; கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தயாரிப்பது மற்றும் சோதிப்பதற்கான தடை; அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை தொடர்பான தொழில் நுட்பங்களை மாற்றுவதற்கான தடை போன்ற கட்டுப்பாடுகளும் இதில் அடங்கும்.
அதேபோல் மற்ற நாடுகள் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை தொடர்பான தொழில்நுட்பங்களை ஈரானுடன் பகிர்வதற்கும் தடை விதிக்கப்படுகிறது.
இந்த தடைகளை அமல்படுத்துவதற்கான கடமைகளை ஐ.நா. உறுப்பு நாடுகள் நிறைவேற்றத் தவறினால் அவற்றுக்கான விளைவுகளை அந்த நாடுகள் சந்திக்கும். ஒரு விரிவான ஒப்பந்தம் எட்டப்படும் வரை அமெரிக்கா ஈரானுக்கு எதிரான அதிகபட்ச அழுத்தத்தை தொடரும்.
எதிர்வரும் நாட்களில் ஐ.நா. பொருளாதார தடைகளை அமல்படுத்துவதை வலுப்படுத்தவும், அதை மீறுபவர்களை பொறுப்புக்கூற வைக்கும் பல கூடுதல் நடவடிக்கைகளை அமெரிக்கா அறிவிக்கும்.