கிரிக்கெட் இரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரி-20 கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். தொடர் இன்று ஆரம்பமாகியுள்ளது.

இந்தத் தொடரின் முதலாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர்கிங்ஸ் அணி தொடரின் முதல் வெற்றியை பெற்றுள்ளது. இதன்படி சென்னை அணி ஐந்து விக்கெட்டுகளால் வெற்றியை சுவீகரித்தது.

இந்தப் போட்டி, அபுதாபியில் உள்ள செய்க் ஷயெட் மைதானத்தில் இலங்கை நேரப்படி நேற்று(சனிக்கிழமை) மாலை 7.30 மணிக்கு ஆரம்பமாகியது.

இந்தப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, குயின்ரன் டி கொஹ் மற்றும் திவாரி ஆகியோரின் நிதான துடுப்பாட்டத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணிசார்பில், சவுரப் திவாரி 42 ஓட்டங்களையும் குயின்ரன் டி கொஹ் 33 ஓட்டங்களையும் பொல்லார்ட் 18 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் சென்னை அணி சார்பில், லுங்கி நெகிடி மூன்று விக்கெட்டுகளையும் தீபக் சாகர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியதோடு, சாம் ஹியுரன் மற்றும் பியூஸ் சாவ்லா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இந்நிலையில், 163 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய சென்னை சூப்பர்கிங்ஸ் அணி அம்பதி ராயுடு மற்றும் பிளெஸிஸ் ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டத்தின் உதவியுடன் ஐந்து விக்கெட்டுகளால் மும்பை அணியை வீழ்த்தியது.

அணி சார்பாக, அம்பதி ராயுடு 03 ஆறு ஓட்டங்கள், 6 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 71 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

அத்துடன், டு பிளெஸிஸ் ஆட்டமிழக்காமல் 58 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்ததுடன், சாம் கியுரன் இறுதி நேரத்தில் 02 ஆறு ஓட்டங்கள், ஒரு நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 18 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

பந்துவீச்சில் மும்பை அணி சார்பில் ரென்ற் போல்ற், ஜேம்ஸ் பற்றின்சன், ஜஸ்பிரிற் பும்ரா, குருணல் பாண்டியா மற்றும் ராகுல் சாகர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக இறுதி நேரத்தில் அணியின் வெற்றிக்காக சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய சாம் கியுரன் தெரிவுசெய்யப்பட்டார்.