அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் கொரோனா தடுப்பூசி கொண்டுவர டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நவம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருவதற்குள், கொரோனா தடுப்பூசியை கொண்டு வந்து விட வேண்டும் என ஜனாதிபதி டிரம்ப், அதிகாரிகளை முடுக்கி விட்டிருப்பதாக வெள்ளை மாளிகை தகவல்கள் கூறுகின்றன.

கொரோனா வைரஸ் தொற்று, உலகின் பிற எந்த நாட்டையும் விட அமெரிக்காவில்தான் பெரும்பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இது அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்புக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

அங்கு நேற்று மாலை நிலவரப்படி 21 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளது, உயிர்பலியும் 1 லட்சத்து 17 ஆயிரத்தை கடந்துள்ளது என்று அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையம் புள்ளி விவரம் தருகிறது.

கொரோனா வைரஸ் பரவலை சரியாக கையாளவில்லை என்று ஜனாதிபதி டிரம்ப் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. கொரோனாவுக்கு பின்னர் அவரது செல்வாக்கு சரிந்துவருவதையும் கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.

இந்த நிலையில் வரும் நவம்பர் 3-ந் தேதி அங்கு ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. தேர்தலுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசியை கொண்டு வந்து கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என்பதில் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.

கொரோனாவை வீழ்த்தாவிட்டால், அது தனக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் திரும்பி விடும் என்ற எண்ணமும் அவருக்கு இருக்கிறது.

இந்த வகையில், இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு வேகமாக கொரோனா தடுப்பூசியை கொண்டு வருவதில் காலக்கெடுவை விரைவாக நகர்த்த வேண்டும் என்று அவர் சுகாதாரத்துறை அதிகாரிகளை முடுக்கி விட்டு இருக்கிறார்.

மேலும், கொரோனா தடுப்பூசியை விரைவாக கொண்டு வர ‘ஆபரேஷன் வார்ப் ஸ்பீட்’ என்ற திட்டத்தை ஏற்படுத்தி அதற்கு சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை மந்திரி அலெக்ஸ் அசாரை ஜனாதிபதி டிரம்ப் மேற்பார்வையிட வைத்துள்ளார். அலெக்ஸ் அசாருடன் ராணுவ மந்திரி மார்க் எஸ்பரும் இதில் இணைந்து செயல்படுகிறார்.

அவர்களிடம் கொரோனா வைரஸ் தடுப்பூசியை கொண்டுவருவதில், முன் எப்போதும் இல்லாத வகையில் காலக்கெடுவை ஜனாதிபதி டிரம்ப் விரைவுபடுத்தினார் என்று இந்த சந்திப்பை நன்கு அறிந்த வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறினர்.

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு முடிவு எட்டப்படுவதை நிரூபிக்க இந்த ஆண்டின் இறுதிக்குள் தடுப்பூசியை பெற வேண்டும் என்று டிரம்ப் விரும்புகிறார் என அந்த அதிகாரிகள் கூறினர்.

அந்த வகையில், டிரம்ப் காலக்கெடு நிர்ணயித்து இருப்பது, கொரோனா தடுப்பூசியை முழுமையான பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு முன்பாக ஒருவித மட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டை அங்கீகரிக்குமாறு கட்டுப்பாட்டாளர்களை கடுமையான அழுத்தத்துக்கு ஆளாக்கும் என்ற கவலையும் விஞ்ஞானிகள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நேரத்தில் தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் கொரோனா தீவிரமாக பரவி வரும் வேளையில் பொருளாதார நடவடிக்கைகளை மாகாணங்கள் தொடங்க டிரம்ப் ஊக்குவிப்பதுவும் விஞ்ஞானிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது என வாஷிங்டன் தகவல்கள் கூறுகின்றன

இந்த வாரத்தில் அலபாமா, அரிசோனா, புளோரிடா, நெவேடா, வட கரோலினா, ஓக்லஹாமா, ஓரிகான், தென்கரோலினா, டெக்சாஸ் ஆகிய மாகாணங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.