இந்தியாவின் 74ஆவது சுதந்திர தினம் நாளை நடைபெறவுள்ள நிலையில் டெல்லி செங்கோட்டைப் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
செங்கோட்டையில் நாளைய தினம் பிரதமர் மோடி மூவண்ணக் கொடியை ஏற்றவுள்ள நிலையில இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
என்.எஸ்.ஜி. கொமாண்டோக்கள், குறி பார்த்துச் சுடும் வீரர்கள், ஸ்வாட் கொமாண்டோ படையினர் உள்ளிட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், பட்டம், டிரோன் விமானங்கள் போன்றவை பறக்காமல் தடுக்க பொலிஸ் துறையினரின் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையைச் சுற்றி 300 கண்காணிப்பு கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த நான்காயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், சுதந்திர தினத்தையொட்டி டெல்லியின் முதன்மையான வீதிகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளதுடன் வீதிகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களும் தீவிரச் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
மேலும், வழக்கமாகப் பட்டியலிடப்பட்ட விமானங்கள், முப்படைகளின் விமானங்கள், ஆளுநர், முதலமைச்சர்கள் வரும் விமானங்களைத் தவிர ஏனைய விமானங்கள் டெல்லியில் நாளை காலை ஆறு மணி முதல் 10 மணி வரையும் மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை.
இதேவேளை, இந்த சுதந்திர தின விழாவிற்கு குறிப்பிட்ட அழைப்பாளர்கள் மட்டுமே பங்கேற்கவுள்ளனர்.