சீனாவில் மீன்பிடி படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.
சீனாவின் கிழக்கு மாகாணம் ஜெஜியாங்கில் உள்ள நிங்போ ஜுஷான் துறைமுகத்தில் இருந்து 100 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் நேற்று காலை மீன் பிடி படகு ஒன்று மீன் பிடிப்பில் ஈடுபட்டிருந்து.
அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக அந்த படகு திடீரென கடலில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 20 பேரும் நீரில் மூழ்கினர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சீன கடலோர காவல் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் அதற்குள் 12 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது உடல்களை மீட்பு குழுவினர் மீட்டனர். அதேசமயம் நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மேலும் இந்த விபத்தில் 4 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்