நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் திட்டம் ஒன்றை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

கடந்த பிப்ரவரி 1-ந் தேதி, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரி செலுத்துவோர் சாசனம் தொடங்கப்படும் என்று அறிவித்தார். இந்த சாசனம், வரி செலுத்துவோருக்கும், வருமான வரித்துறைக்கும் இடையே நம்பிக்கையை வளர்க்கும் என்றும், வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறையினரின் தொந்தரவுகளை குறைக்கும் என்றும் அவர் கூறினார். வரி செலுத்துவோர் மதிக்கப்படுவார்கள் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில், நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்க ஒளிவுமறைவற்ற வரிவிதிப்பு-நேர்மையாக வரி செலுத்துவோருக்கு கவுரவம் என்ற திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இந்த திட்டத்தை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

நேரடி வரி விதிப்பு முறைகளை சீர்படுத்தும் முயற்சிகளின் ஒரு கட்டமாக இத்திட்டம் தொடங்கப்படுகிறது. வரி விகிதங்களை குறைத்து நேரடி வரி விதிப்பை எளிமைப்படுத்தும் வகையில் வரி சீர்திருத்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படுவதாக பிரதமர் அலுவலகம் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு கார்ப்பரேட் வரி 30 ல் இருந்து 22 சதவிகிதமாக குறைக்கப்பட்டதுடன், உற்பத்தித் துறைக்கு வரும் புதிய நிறுவனங்களுக்கு 15 சதவிகிதமாக மேலும் குறைக்கப்பட்டது.