கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் மனித அழிவை ஏற்படுத்திவரும் நிலையில் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒன்றரை கோடியை கடந்துள்ளது.
இதுவரையான காலப்பகுதியில் இந்த வைரஸ் தொற்றினால் ஒரு கோடியே 50 இலட்சத்து 98 ஆயிரத்து 721 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளது.
அத்துடன், இதுவரை ஆறு இலட்சத்து 19 ஆயிரத்து 593 பேர் வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளமை பதிவாகியுள்ளது.
இதேவேளை, வைரஸிலிருந்து பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியை அண்மித்துள்ளமை ஆறுதலை ஏற்படுத்தியுள்ளதுடன் இதுவரையான காலப்பகுதியில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 91 இலட்சத்து 16 ஆயிரத்து 242 ஆகப் பதிவாகியள்ளது.
இந்த வைரஸ் தொற்றினால் அமெரிக்காவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் அங்குமட்டும் மொத்த பாதிப்பு 40 இலட்சத்தைக் கடந்துள்ளது. அத்துடன் அந்நாட்டில் ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 953 பேர் மரணித்துள்ளனர்.
மேலும், தற்போது அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ள பிரேஸிலில் 21 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 81 ஆயிரத்து 597 பேர் இதுவரை மரணித்துள்ளனர்.
இதனைவிட, பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவில் 11 இலட்சத்து 94 ஆயிரம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பிரித்தானியா, மெக்ஸிகோ, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான் போன்ற நாடுகளிலும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பையும் அதிகளவான மரணங்களையும் ஏற்படுத்தியுள்ளது.