புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி ஜெயப்ரியா, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் நடந்து இரண்டு நாட்களில் தற்போது திருச்சி அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள அரியாவூர் அதவத்தூர்பாளையம் என்ற பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரது மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று தனது தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த அவர், இயற்கை உபாதையை கழிக்க காட்டுப்பகுதிக்கு சென்றதாக தெரிகிறது
தனது மகள் காட்டுப்பகுதிக்கு சென்று நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது தாய் காட்டுப்பகுதியில் தேடியபோது கருவேல முள் பகுதியில் அவரது உடல் எரிந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அந்த பகுதி மக்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
இதுகுறித்த தகவல் அறிந்த சோமரசம்பேட்டை காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கொலையாளிகளை பிடிக்க முயற்சிகளுமே செய்யப்பட்டது
இந்த நிலையில் ஒன்பதாம் வகுப்பு மாணவி படுகொலை குறித்து விசாரணை செய்ய திருச்சி மாவட்ட எஸ்பி தலைமையில் 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், குற்றவாளி விரைவில் பிடிபடுவார்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
இரண்டு நாட்களுக்கு முன் அறந்தாங்கி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து தமிழக மக்கள் இன்னும் மீளாத நிலையில் தற்போது ஒன்பதாம் வகுப்பு மாணவி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது